சினிமா
லண்டனில் இசை கோர்க்கும் இளையராஜா!
நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக லண்டன் சென்றுள்ளார் இசைஞானி இளையராஜா. கவுதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் மற்றும் இசை பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜா, அவற்றை லண்டனில் மாஸ்டரிங் செய்கிறார். இதற்காக அவர் நேற்று லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில், ஹங்கேரி இசைக் குழுவினருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொள்கிறார். ஒரு வாரம் வரை அங்கே தங்கியிருந்து படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளையும் முடிக்கிறார். படத்தின் இயக்குநர் கவுதம் மேனனும் உடன் சென்றுள்ளார். |
வீரப்பனுடன் இருந்து கடத்தியவரும் கடத்தப்பட்டவரும் சந்தித்தவேளையில்...
உயிரோடு இருந்து அதிரடி அட்டகாசங்கள் செய்த போதும் சரி, சுட்டுக் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகளான பிறகும் சரி... செய்திகளுக்குப் பஞ்சம் வைக்காத மனிதர் வீரப்பன். இந்த செய்திகள், வீரப்பன் கதைகள் பலரை இன்னும் வாழ வைப்பதைப் பார்க்க முடிகிறது. வீரப்பனின் கதை இப்போது தமிழ் - கன்னடத்தில் பிரமாண்ட சினிமாவாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளவர் ராஜீவ் கொலையை மையமாக வைத்து குப்பி என்ற அருமையான படத்தைத் தந்த ஏஎம்ஆர் ரமேஷ். கிஷோர் வீரப்பனாகவும், அர்ஜூன் போலீஸ் அதிகாரி விஜயகுமாராகவும் நடித்துள்ள படம் இது. முழுக்க முழுக்க வீரப்பன் வாழ்ந்த, அதிரடி சாகஸங்கள் செய்த, தாக்குதல் நடத்திய, சுட்டுக் கொல்லப்பட்ட இடங்களிலேயே நேரில் போய் இந்தப் படப்பிடிப்பை முடித்துள்ளனர். வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமி, வீரப்பன் தந்தையாக யோகி தேவராஜ் என தேர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய காட்சியாக வருவது டாக்டர் ராஜ்குமார் கடத்தல்தான். இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் அர்ஜூன் பங்கேற்றுப் பேசுகையில், "ஒரு ரியல் ஹீரோவை பற்றிய படத்தில், ரீல் ஹீரோவான நான் நடிக்கிறேன். படத்தில் எனக்கு போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடம். உயிருடன் இருக்கும் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது, சவாலான விஷயம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் பயந்தேன். 'வனயுத்தம்' படத்தில் நடிக்கும்படி ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்னிடம் வந்து கேட்டபோது, நான் தயங்கினேன். வீரப்பன் கதை எல்லோருக்கும் தெரியுமே...இவர் எப்படி எடுக்கப்போகிறார்? என்று சந்தேகப்பட்டேன். ஆனால், படத்தின் `ஸ்கிரிப்ட்'டை படித்துப் பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்தது. யார் மீது தப்பு? என்று `ஸ்கிரிப்ட்'டில் சொல்லவில்லை. ரமேஷ் இந்த 'ஸ்கிரிப்ட்'டுக்காக 12 வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறார். அவருடைய உழைப்பு படத்தில் தெரியும். இந்தப்படத்துக்காக சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாட்டுக்குப் போய் பாடல்களை எடுக்கவில்லை. எல்லாமே அடந்த காட்டில்தான். என்னை பொறுத்தவரை இது, எனக்கு ஒரு 'ஸ்பெஷல்' ஆன படம். நான் நேசிக்கும், எனக்கு பிடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்,'' என்றார். படத்தின் உண்மையான ஹீரோவான வீரப்பன் கிஷோர் அடக்கமாகப் பேசினார். நடிப்பும் படமும் பேசட்டும் என்றார். நல்ல பாலிசி! இயக்குநர் ரமேஷ் பேசுகையில், "இந்தப் படத்தை எடுக்க என் வீட்டை விற்றேன். இந்த வீட்டுக்கு வாஸ்து சரியில்ல. நாம வேற வீடு வாங்கிக்கலாம் என்று கூறித்தான் விற்றேன். அந்தப் பணத்தில்தான் இந்தப் படம் எடுக்கிறேன். இதற்கெல்லாம் அமைதியாக தலையாட்டிக் கொண்டு அனுமதித்த என் மனைவிக்கு முதல் நன்றி சொல்ல வேண்டும். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாளிலிருந்தே எனது ஆராய்ச்சியைத் தொடங்கினேன். ஒவ்வொரு ஜெயிலாக ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி வீரப்பன் விஷயத்தில் கைதானவர்களை பேட்டியெடுத்தேன். 250 பேரை இப்படி சந்தித்தேன். அதுமட்டுமல்ல, போலீஸ் அதிகாரி விஜயகுமாரிடமும் நிறைய தகவல்களைப் பெற்றேன். இரு தரப்பிலும் நடந்த உண்மை சம்பவங்களைதான் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். இது யாருக்கும் ஆதரவான படமும் இல்லை. எதிரான படமும் இல்லை. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை," என்றார். கன்னடத்தில் இந்தப் படத்துக்கு தலைப்பு அட்டஹாஸா! படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்... வீரப்பனுடன் சேர்ந்து கன்னட சூப்பர் ஸ்டார் மறைந்த ராஜ்குமாரை கடத்தியவர்களில் ஒருவரான முகில் என்பவரையும், ராஜ்குமாருடன் சேர்ந்து கடத்தப்பட்ட நாகப்பாவையும் தேடிப்பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இருவரும் படப்பிடிப்பில் சந்தித்தபோது பழைய நினைவுகளில் மூழ்கி விட்டார்களாம்! அது உண்மையிலே செம சீனாக இருந்திருக்கும்ல! |
நடிகை ரீமா சென் - ஷிவ்கரன் சிங் திருமணம் நாளை டெல்லியில் நடக்கிறது!
தனது நீண்ட நாள் காதலர் ஓட்டல் அதிபர் ஸிவ் கரன்சிங்கை நாளை மணக்கிறார் பிரபல நடிகை ரீமா சென். மின்னலே படம் மூலம் தமிழில் அறிமுகமாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ரீமா சென். கொல்கத்தாவை சேர்ந்த இவர், தெலுங்கு, வங்காளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன்தான் கடைசிப் படம். ராஜபாட்டையில் ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டுபப் போனார். வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நிலையில், ரீமாசென்னுக்கும், ஷிவ் கரன்சிங்குக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஷிவ்கரன்சிங் டெல்லியில் ஓட்டல்கள் மற்றும் 'பார்' நடத்தி வருகிறார். கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோர் சம்மதத்துடன் மோதிரம் மாற்றி நிச்சயம் கொண்டனர். நிச்சயம் செய்தபடி, ரீமாசென்னுக்கும், ஷிவ் கரன்சிங்குக்கும் டெல்லியில், ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ரீமாசென்னின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ராம்ஜி, நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்ட தமிழ் பல திரையுலக பிரமுகர்கள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று முன்பே ரீமா சென் கூறியிருந்தது நினைவிருக்கலாம். |
சிங்கப்பூர் விழாவில் 5 விருதுகளை அள்ளிய மங்காத்தா
சிங்கப்பூரில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் விழாவில் அஜீத்தின் மங்காத்தா 5 விருதுகளை அள்ளியுள்ளது. ஐஎம்என் பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த 3ம் தேதி சிங்கப்பூரில் நடந்தது. அந்த விழாவில் சிறந்த படம் உள்பட அதிகபட்சமாக 5 விருதுகளை அள்ளிக் குவித்தது அஜீத் குமாரின் 50வது படமான மங்காத்தா சாதனை படைத்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் வெங்கட் பிரவு, சிறந்த ஒளிப்பதிவாளர்(சக்தி சரவணன்), சிறந்த பாடகி(சுசித்ரா) மற்றும் சிறந்த துணை நடிகர்(பிரேம்ஜி அமரன்) ஆகிய 5 பிரிவுகளில் மங்காத்தாவுக்கு விருதுகள் கிடைத்துள்ளது. அண்ணன் வெங்கட் பிரபுவும், தம்பி பிரேம்ஜி அமரனும் மங்காத்தாவுக்காக விருது பெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. சிம்பு சிறந்த நடிகர்-ஸ்ரேயா சிறந்த நடிகை வானம் படத்திற்காக சிலம்பரசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரௌத்திரம் படத்திற்காக ஸ்ரேயாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. சிறந்த வளர்ந்து வரும் நடிகருக்கான விருது எங்கேயும், எப்போதும் படத்துக்காக ஜெய்க்கு கிடைத்தது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரேயா, ஹன்சிகா மோத்வானி, சந்தியா, மேக்னா நாயுடு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். |
மனைவி லதாவின் பிறந்த நாளைக் கொண்டாடிய ரஜினி!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி, லதா ரஜினிக்கு இன்று பிறந்த நாள். இன்று
வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த நாளை கொண்டாடினார்
சூப்பர் ஸ்டார். ஸ்டெல்லா மாரீஸில் எம்ஏ வரை படித்தவர் லதா. கல்லூரியில் படிக்கும்போது ரஜினியை காதலித்து மணந்தார். சிறந்த குடும்பத் தலைவியாகத் திகழ்கிறார். சினிமாவில் ஒரு பின்னணிப் பாடகியாக தன் கேரியரை ஆரம்பித்தார் லதா ரஜினி. ஆனால் அவர் பாடிய முதல் பாடல் ரஜினி படத்தில் அல்ல... கமலின் டிக்டிக்டிக் படத்தில், இளையராஜா இசையில் ஒரு அட்டகாசமான பாடலுடன் தொடங்கினார். அடுத்து அன்புள்ள ரஜினிகாந்தில் கேட்பவரை உருக வைக்கும் 'கடவுள் உள்ளமே...' இவரது குரல்தான். அதன் பிறகு, பாடுவதை நிறுத்திவிட்ட லதா, கவனத்தை முழுக்க குடும்பத்தைக் கவனிப்பதிலும், ஆஷ்ரம் பள்ளியின் கல்விப் பணிகளிலும் செலுத்த ஆரம்பித்தார். இருந்தாலும் அவ்வப்போது மாணவர்களுக்காக தனி ஆல்பங்கள் பாடினார். மாணவர்களிடம் கடவுள் பக்தி, நல்லொழுக்கம், தமிழ் உணர்வை ஊட்டும் பாடல்கள் அவை. ஆஷ்ரம் பள்ளியின் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் இந்த பாடல்களை மாணவர்கள் பாடுவதைக் காணலாம். ரஜினியின் திரையுலக வெள்ளிவிழாவைக் கொண்டாடும் வகையில் 1999-ல் ரஜினி 25 எனும் ஆல்பத்தையும் உருவாக்கினார். இடையில் வள்ளி படத்தில் 'குக்கூ...', 'டிங் டாங்...' என இரு சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி அசத்தியிருந்தார் லதா ரஜினி (1993). அந்தப் பாடல்கள் அடைந்த வெற்றியால் பல வாய்ப்புகள் அவருக்கு வந்தும், அவற்றை நாசூக்காக மறுத்துவிட்டார். லதா ரஜினி திரையில் பாடிய அனைத்துப் பாடல்களுக்கும் இசைஞானிதான் இசை! "இந்த உலகில் கஷ்டப்படும் அத்தனை குழந்தைகளையும் அரவணைத்து அன்பு செலுத்த வேண்டும் என்பது என் ஆவல். இறைவன் அதற்கான சக்தியை எனக்குத் தரவேண்டும்," என்பது லதாவின் ஆசை. கல்வித் துறையில் தனது பங்களிப்பை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளார். அந்த ஆசை நிறைவேறட்டும்! |
மார்ச் 15-ம் தேதி பில்லா -2 ட்ரெயிலர்!
அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் வரும் மார்ச் 15-ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. ரஜினியின் பில்லா படத்தை அஜீத்தை வைத்து ரீமேக் செய்து வெளியிட்டு வெற்றி கண்டனர். இப்போது அந்தப் படத்துக்கு முன்கதையாக பில்லா-2வை தயாரிக்கின்றனர். இதில் பில்லா ஏன் உருவானான் என்ற கதை சொல்லப்படுகிறது. தாதா மற்றும் நடுத்தர நல்ல இளைஞன் என இரு கெட்டப்களில் தோன்றுகிறார் அஜீத். நாயகியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்கிறார். கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்குகிறார். பில்லா-2 பட டிரெய்லர் மற்றும் பாடலை வரும் மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். மார்ச் 15-ம் தேதி இந்த விழா நடக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே படத்தின் புதிய டிசைன்கள் மற்றும் போஸ்டர்களை படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேத்ரபால் மூலம் இன்று வெளியாகியுள்ளது. |
பில்லா-2விலும் நயன்தாரா
சினிமாவில் ரீ-எண்ட்ரியாகி இருக்கும் நடிகை நயன்தாரா, அஜித்தின் பில்லா-2 படத்தில் கெஸ்ட் ரோலில் வர இருக்கிறாராம். கடந்த 2007ம் ஆண்டு அஜித், நயன்தாரா, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தில் அஜித்தின் அசத்தலான நடிப்பு, பின்னணி இசை, விஷ்ணுவர்தனின் விறுவிறுப்பான திரைக்கதை தவிர, படத்திற்கு நயன்தாரா-நமீதாவின் கவர்ச்சி காம்பினேஷனும் ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் பில்லா படத்தின் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது. சக்ரி டோல்ட்டி இயக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான பகுதி முடிந்துவிட்ட நிலையில், பில்லா-2வில் கெஸ்ட் ரோலில் நடிகை நயன்தாராவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபுதேவாவுடனான காதலை முறித்து கொண்டு சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் நயன்தாரா, தெலுங்கில் ஒரு படத்திலும், தமிழில் அஜித் ஜோடியாக ஒரு படத்திலும் கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. |
மீண்டும் அரசியலுக்கு வருவேன் ; வடிவேல்
![]() மேலும் அவர் தனது பேட்டியில், வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். ஓட்டுப்போடும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். ஓட்டுப்போடும் மக்களில் நானும் ஒருவன் என்பதால் நானும் அரசியல்வாதிதான். தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள். காலமும், சூழ்நிலையும் நிர்ப்பந்நதிக்கும்போது மக்களை சந்திப்பேன். நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளமாட்டேன். தீவிர அரசியலில் குதிப்பேன். அரசியலுக்கு நான் வரக்கூடாது என்று சொல்வது அபத்தம். நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது. திரையுலகம் என்னை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக சொல்கிறார்கள். விரைவில் நான் கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளிவரும் என்று கூறியிருக்கிறார், வடிவேலு. |
மூன்றில் ரஜினி
தனுஷ் - ஸ்ருதி ஜோடியாக நடித்த “3” படம் விரைவில் ரிலீசாகிறது. தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். கஸ்தூரி ராஜா தயாரிக்கிறார். இதில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப தனுஷ், ஸ்ருதி தவிர 3-வது நபராக ரஜினி நடித்துள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து கஸ்தூரி ராஜாவிடம் கேட்ட போது 3-வது நபர் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது அது சஸ்பென்ஸ் என்றார். ஆனாலும் படத்துக்கு டைட்டில் மிகவும் பொருத்தமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இப்படத்தில் தனுஷ் எழுதி பாடிய கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. இதனால் படத்தை ரூ.50 கோடி , ரூ.60 கோடி என பலர் விலை பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கஸ்தூரி ராஜா மேலும் கூறும் போது இன்னும் வியாபாரம் முடியவில்லை. கொலை வெறி பாடல் படத்தை அதிக விலைக்கு கேட்டு எங்களை பலர் அணுகி இருப்பது உண்மைதான். இப்போதுதான் பிசினஸ் பேச துவங்கியுள்ளோம் என்றார். 3 படம் மார்ச் 30-ந்தேதி ரிலீசாகும் என்றும் கூறினார். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் 3 படம் ரிலீசாகிறது. தமிழில் 300 முதல் 400 பிரிண்ட்கள் போடப்படுகின்றன. ஐஸ்வர்யா மிகுந்த ஈடுபாட்டோடு கடுமையாக உழைத்து படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் என்றும் கஸ்தூரி ராஜா தெரிவித்தார். இப்படத்துக்கு ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றியுள்ளார். |
மலையாள நடிகருடன் காதல் ; பாவனா
பாவனா தமிழில் “சித்திரம் பேசுதடி” படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தீபாவளி, ஆர்யா, அசல், ஜெயம் கொண்டான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ராஜீவ்பிள்ளை கேரளாவில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது மறுத்தார். ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் எங்களுக்குள் காதல் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார். ராஜீவ்பிள்ளையும் பாவனாவை காதலிக்கவில்லை என மறுத்துள்ளார். ஆனால் இருவரும் ரகசியமாக சந்திப்பதாக மலையாள பட உலகினர் கிசு கிசுக்கின்றனர். |
1-10 of 140