ஜெய்யுடன் காதல் இல்லை... இனி சேர்ந்து நடிக்கவும் மாட்டேன்...! - அஞ்சலி அதிரடி

posted Nov 21, 2011, 6:40 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 21, 2011, 6:41 AM ]
எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை. என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் ஜெய்யுடன் இனி நடிக்கப் போவதும் இல்லை, என்று அறிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.

நடிகை ஜெய்யும் அஞ்சலியும் எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். பொது இடங்களில் இருவரும் அடிக்கடி காணப்பட்டனர். ஏழாம் அறிவு பட இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கினர்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் காதல் என கிசுகிசு வெளியானது. இந்த நிலையில், ஜெய்யும் அஞ்சலியும் மீண்டும் ஏஜிஎஸ் படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், அனைத்து கிசுக்கள் மற்றும் செய்திகளை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அஞ்சலி.

அதில், "அங்காடித் தெரு மூலம் எனக்கொரு அங்கீகாரத்தைக் கொடுத்த ரசிகர் ரசிகைகளுக்கு எங்கேயும் எப்போதும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்.வாழ்க்கையில் ஜெயிக்க போராடித்தான் ஆக வேண்டும். ஐந்து ஆண்டுகள் போராடிய பிறகுதான் நல்ல நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்று கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன்.

இப்போதுதான் நல்ல நல்ல படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். ஆனால் அந்த மகிழ்ச்சியைக் கெடுப்பதுபோல், ஒரு நடிகருடன் காதல் (ஜெய்), திருமணம் என்றெல்லாம் பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடன் கிசுகிசுக்கப்படும் அந்த நடிகருடன் இணைந்து ஒரு படம்தான் நடித்துள்ளேன். அதன் பிறகு வந்த கிசுகிசுக்களால், இனி அவருடன் இணைந்து நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன். அப்படி வந்த வாய்ப்புகளையும் தவிர்த்துவிட்டேன். நான் இன்னும் வளரவேண்டும். நல்ல நடிகை என பெயரெடுத்து விருதுகளை வாங்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு உங்களின் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறேன்.

எனக்கு யாருடனும் காதல் இல்லை. இதனை பகிரங்கமாக இப்போது அறிவிக்கிறேன்.தயவு செய்து இனி அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள். நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார் அஞ்சலி.