தாஜ்மஹால் எதிரில் நடக்கவிருந்த ரஹ்மானின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தடை

posted Dec 21, 2011, 7:28 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 21, 2011, 7:29 AM ]
விண்ணைத்தாண்டி வருவாய் படத்தின் இந்தி ரீமேக்கின் இசை வெளியீட்டு விழா ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் எதிரே நடக்கவிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுவிட்டது.

சிம்பு, திரிஷா ஜோடியாக நடித்த ‘விண்ணத்தாண்டி வருவாயா’ படம் இந்தியில் ‘ஏக் தீவானா தா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கவுதம்மேனனே இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் இசைத் தகடு வெளியீட்டு விழாவை ஆக்ராவில் தாஜ்மஹால் பின்னணியோடு அதன் அருகில் நடத்த ஏ.ஆர்.ரஹ்மான் விரும்பினார். இதற்காக அங்கு மேடை அமைக்கவும் கூட்டத்தினரை கூட்டவும் ஏற்பாடு நடந்தது.

ஆனால் தாஜ்மஹால் அருகில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே அங்கு ஒரு இந்தி படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்து படக்குழுவினர் அப்பகுதிகளை சேதப்படுத்தி விட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு வரும் கூட்டத்தினராலும் தாஜ்மஹாலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம் என்பது இந்த அனுமதி மறுப்புக்கு இன்னொரு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

தற்போது இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆக்ராவிலேயே நட்சத்திர ஓட்டலில் விழாவை நடத்துகின்றனர். ஓட்டலிலிருந்து பார்த்தால் தாஜ்மஹால் தெரியுமாறு செட் போடப்பட்டு, விழா நடக்கிறது.