பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்கிறார் டோணி

posted Oct 18, 2011, 9:41 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 18, 2011, 9:42 AM ]
பிரகாஷ் ராஜின் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பெயரே டோணி என்றுதான் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்குபவரும் பிரகாஷ் ராஜ்தான். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:

குழந்தைகள் மனநிலையை மையப்படுத்தி டோனி படம் தயாராகிறது. தேர்வுக்காக குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றனர். பெற்றோரும் அவர்களை அதிக மதிப்பெண் பெற நிர்ப்பந்திக்கின்றனர்.

குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டுவரும் கல்விமுறை நம்மிடம் இல்லை. குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது. சமூகத்துக்கு இப்படம் சில கருத்துக்களை சொல்லும். ஆகாஷ், ராதிகாஆப்தே, தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர்.

கே.பி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். பிரபுதேவா எனக்கு நெருங்கிய நண்பர். அவர் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். ஒரு பாடல் காட்சியில் வருகிறார். இந்த வருடம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் டோணியும் கவுரவ தோற்றத்தில் தோன்றப் போகிறாராம். இதுகுறித்து பிரகாஷ்ராஜிடம் கேட்டபோது, படத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதை பின்னர் சொல்கிறேன் என்று கூறினார்.

ஏற்கெனவே சினிமா மற்றும் விளம்பரங்களில் தோன்றியுள்ளார் டோணி என்பது குறிப்பிடத்தக்கது.