ரஜினி படத்துக்கு 'ஈக்குவலா'...!! - மறுபடியும் ஆரம்பித்தார் 'டாக்டர்' விஜய்!

posted Jan 21, 2012, 9:37 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 21, 2012, 9:37 AM ]
கொஞ்ச நாட்களாக கேட்காமலிருந்து 'ரஜினி படத்துக்கு ஈக்குவலா...' என்ற சுயபுராணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது விஜய் தரப்பு.

எல்லாம், நண்பன் படம் நன்றாகப் போகிறது என்று வரும் செய்திகள் மற்றும் பேச்சுக்களின் விளைவு!

இதுவரை வந்த விஜய் படங்களிலேயே இதுதான் நல்லாருக்கு என்று பலரும் நண்பன் படத்தைப் பாராட்டி வருகின்றனர். காரணம், நிச்சயமாக விஜய் இல்லை!

இது ஷங்கர் என்ற திறமையான இயக்குநரின் கைவண்ணத்துக்கு கிடைத்த பெருமை. அதுமட்டுமல்ல, இந்தக் கதை அப்படி. இதே படத்தை ஒஸ்தி மாதிரி கூட பண்ணியிருக்க முடியும். ஆனால் இயக்குநரின் ஆளுமை மிக்க இயக்கமே இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது. விஜய் மட்டுமல்லாமல், சத்யராஜ், சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் என பெரும் நட்சத்திரக் கூட்டம் இந்தப் படத்தில் பணியாற்றியிருந்தது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த, விஜய் மற்றும் அவரது குழுவினர், நண்பன் படம் ஒரே வாரத்தில் ரஜினியின் எந்திரனை மிஞ்சிவிட்டதாக தங்களுக்கு ரிப்போர்ட்ஸ் வந்துள்ளதாகவும், அதனை ஆதாரப்பூர்வமாக காட்ட முடியும் என்றும் கூறினர் (பத்திரிகையில் செய்தியாக வெளியிடலாமே!).

குறிப்பாக விஜய் பேசுகையில், 'இந்தப் படம் ரஜினியின் எந்திரன் பட வசூலுக்கு ஈக்குவலா வந்துள்ளதாகவும், சில இடங்களில் அதை மிஞ்சியதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மண்டைக்குள் ஏற்றிக் கொள்வதா வேண்டாமா என்று கூடத் தெரியவில்லை,' என்றார், ரொம்ப அடக்கமான பிள்ளை போல!

எந்திரன் படம் தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது. நண்பன் படம் 600 அரங்குகளில் வெளியாகியுள்ளது. உலகமெங்கும் எந்திரனுக்கு 3000 அரங்குகளில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரையரங்க வெளியீட்டின் மூலம் மட்டுமே எந்திரனுக்கு ரூ 375 கோடி கிடைத்தது. ஆனால் நண்பன் தமிழில் மட்டுமே வெளியாகியுள்ளது.

முதல் மூன்று நாட்களில் எந்திரன் வசூலித்தது ரூ 62 கோடி. முதல் வாரத்தில் அது 117 கோடியாக உயர்ந்தது. முதல் வார முடிவில் நண்பன் வசூலித்ததாகக் கூறப்படுவது ரூ 20 கோடி மட்டும்தான். இந்தப் படம் தினசரி வசூலாக முதல் மூன்று நாட்கள் ரூ 4 கோடி வசூலித்தாக பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் கூறுகின்றன.

ச்சும்மா லுலுலாயி...

சில தினங்களுக்கு முன், பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய்யின் தந்தையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான எஸ் ஏ சந்திரசேகரன், "நாங்கள் அவ்வப்போது மாபெரும் வசூல், இந்தப் படத்தின் சாதனை முறியடிப்பு என்றெல்லாம் விளம்பரங்கள் தருவோம், பேட்டி கொடுப்போம். அதையெல்லாம் நம்பாதீர்கள். படம் ஓடவேண்டுமே என்பதற்காக நாங்களாகவே செய்யும் தவறான வேலை இது. இதை நம்பி அரசு எங்களை வரி கேட்கிறது," என்றார்.

நண்பன் வசூல் பற்றி 'டாக்டர்' விஜய் சொல்வதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது!!