மம்பட்டியான் படத்தை தடை செய்யக்கோரி மம்பட்டியான் மகன் வழக்கு தாக்கல்

posted Dec 9, 2011, 9:13 AM by Sathiyaraj Kathiramalai
மம்பட்டியான்’ என்ற சினிமா படத்தை வெளியிட தடைக்கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் மம்பட்டியான் மகன் நல்லப்பன். சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில், சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த நல்லப்பன் தாக்கல் செய்த மனுவில், “என் தந்தை மம்பட்டியான் என்ற அய்யாத்துரையை முன்விரோதம் காரணமாக கருப்பன் என்பவர் 1964-ம் ஆண்டும் கொலை செய்தார். ஆனால் போலீசார்தான் என் தந்தை மம்பட்டியானை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டனர். தான் சார்ந்த சமுதாயத்துக்காக பாடுபட்டவர் அவர்.

தமிழக அரசு என் தந்தையை பிடிக்க மலபார் போலீஸ் உட்பட பல தனிப்படையை அமைத்தது. என் தந்தை மம்பட்டியான், தமிழகத்தில் பிரபலமானவர். லட்சக்கணக்கான மலைசாதியினராலும், சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களாலும் தலைவனாக போற்றப்படுபவர் அவர். இந்த நிலையில் என் தந்தையை பற்றிய உண்மைக்கு புறமான தகவலுடன் லட்சுமி சாந்தி மூவிஸ் உரிமையாளர் தியாகராஜன் சினிமா எடுப்பதாக தெரிகிறது. என் தந்தையை பற்றி தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் அது ஏற்படுத்திவிடும்.

இதனால் என்னையும், எங்களது குடும்பத்தினரையும் இந்த சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் சூழ்நிலை ஏற்படும். எந்த தவறும் செய்யாத நானும், என் குடும்பத்தாரும் பாதிக்கப்படக்கூடும். எங்கள் சொத்துக்களை பிறர் சேதமடையச் செய்யக்கூடும்.
‘மம்பட்டியான்’ சினிமாவை வியாபார நோக்கத்துடன் தியாகராஜன் எடுத்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அவர் எங்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதியை பெறாமலேயே எனது தந்தையின் பெயரில் அவரைப் பற்றி படம் எடுத்து வருகிறார். எனவே தியாகராஜன் தயாரிப்பில், நடிகர் பிரசாந்த் நடிக்கும் `மம்பட்டியான்’ படத்தை வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும். என் தந்தை மம்பட்டியானின் பெயர் அல்லது அவரது வாழ்க்கை பற்றிய எந்த அடையாளங்களையும் வைத்துக்கொண்டு அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை 8-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி வினோபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 12-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தியாகராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
Comments