மணிரத்னத்தின் அடுத்த படம் கடல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

posted Feb 4, 2012, 10:24 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 4, 2012, 10:25 AM ]
தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த அறிவிப்பை இன்று அவரே முறைப்படி வெளியிட்டார்.

ராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள். பூக்கடை என இந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை மணிரத்னம் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் இன்று புதிய அறிவிப்பு வெளியிட்டார். படத்துக்குப் பெயர் கடல் என்றும், கார்த்திக் மகன் கவுதம்தான் ஹீரோ என்றும் அவர் கூறியுள்ளார். சமந்தா நாயகியாக நடிக்கிறார்.

அர்ஜூனும், மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதுகிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தென் தமிழகத்தின் கடலோர கிராமப் பின்னணியில் நடக்கும் காதல் கதை இந்தப் படம் என்று கூறப்படுகிறது. தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் அடிக்கடி தாக்குவது, சித்திரவதை செய்வது பற்றியும் இந்தப் படத்தில் மணிரத்னம் காட்சிப்படுத்துவார் என்கிறார்கள். ஆனால் அதில் எந்த அளவுக்கு நேர்மையாக இருப்பார் மணிரத்னம் என்பது தெரியவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழப் போரையே, வல்லரசுகளின் ஆயுத வியாபாரம் என மணிரத்னம் காட்சி வைத்திருந்தது நினைவிருக்கலாம்.