நம்பர் ஒன் நா முத்துக்குமார்!

posted Dec 30, 2011, 8:31 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 30, 2011, 8:32 AM ]
2011-ம் ஆண்டில் மிக அதிக பாடல்களை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரபல கவிஞர், பாடலாசிரியர் நா முத்துக்குமார்.

தமிழ் சினிமாவில் வாலி, வைரமுத்துவுக்குப் பிறகு, நிலையான இடத்தைப் பிடித்த இளம் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார் நா முத்துக்குமார்.

இந்த 2011-ம் ஆண்டு மட்டும் அவர் பாடல் எழுதியுள்ள படங்களின் எண்ணிக்கை 38. இவற்றில் 12 படங்களின் முழுப் பாடல்களையும் முத்துக்குமாரே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 98 பாடல்களைத் தந்துள்ளார் நா முத்துக்குமார்.

இந்த ஆண்டு ஹிட்டான அவரது பாடல்களில் முக்கியமானவை உன் பேரே தெரியாதே, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய்..., கோவிந்த கோவிந்தா... (எங்கேயும் எப்போதும்), முன் அந்திச் சாரல் நீ... (7 ஆம் அறிவு), ஆரிரரோ... , விழிகளில் ஒரு வானவில்... (தெய்வத் திருமகள்), வாரேன் வாரேன்... (புலிவேசம்), விழிகளிலே விழிகளிலே... (குள்ளநரிக் கூட்டம்) போன்றவை.

அதேபோல அதிக இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவரும் முத்துக்குமார்தான்.

2012-ம் ஆண்டில் வெளியாகவிருக்கும் ஏகப்பட்ட படங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார் முத்துக்குமார். பில்லா 2, நண்பன், வேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரவான், தாண்டவம் என முக்கிய படங்களில் அவர்தான் பாடலாசிரியர். மொத்தம் 58 படங்கள் இப்போது கைவசம் உள்ளன.

கொலவெறியோடு புறப்பட்டிருக்கும் புதிய பாடலாசிரியர்களுக்கு மத்தியில் அழகான தமிழ் வார்த்தைகளுடன் அர்த்தமுள்ள பாடல்களைத் தரும் முத்துக்குமாரின் பயணம் தொடரட்டும்!