கமலின் 'காக்கி சட்டை'யை கையில் எடுக்கிறார் நரேன்

posted Jan 5, 2012, 8:46 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 5, 2012, 8:48 AM ]
முகமூடி படத்தில் வில்லன் பாத்திரம் ஏற்று நடித்து வரும் நரேன், அடுத்து கமல்ஹாசனின் முத்திரைப் படங்களில் ஒன்றான காக்கிச் சட்டையின் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம்.

ஜீவா கதாநாயகனாக நடிக்கும் முகமூடி படத்தை தற்போது மிஸ்கின் இயக்கிவருகிறார். இந்த படத்தில் புதுமையாக நரேனை வில்லானாக நடிக்க வைத்துள்ளார் மிஸ்கின். இவர்தான் மலையாளத்து நரேனை தமிழுக்கு சித்திரம் பேசுதடி மூலம் கூட்டி வந்தவர். தொடர்ந்து அஞ்சாதே படத்திலும் வித்தியாசமான வேடத்தில் நரேனை நடிக்க வைத்திருந்தார். இதில் பிரசன்னா வில்லனாக நடித்தார்.

மலையாளத்திலேயே உழன்று கொண்டிருந்த தனக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதால் முகமூடி படத்தில் வில்லனாக நடிக்க உடனே ஒப்புக் கொண்டாராம் நரேன்.


இந்தப் படத்திற்கு அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற காக்கிசட்டை படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகிறாராம் நரேன்.

கமல் சார் நடித்த கதாபத்திரத்தில் நடிக்கப் போகிறேன். இதை எந்தவித குறையில்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் நரேன்.

காக்கி சட்டை படத்திற்காக இப்போதே பயிற்சிகளை எடுத்து வருகிறாராம். முகமூடி படத்திற்கும் சேர்த்தே இந்தப் பயிற்சியாம்.

கமல்ஹாசன், மாதவி, அம்பிகா ஆகியோரது நடிப்பிலும் சத்யராஜின் வித்தியாசமான வில்லத்தனத்திலும் உருவாகி வெற்றி பெற்ற படம் காக்கி சட்டை. இப்படத்தில்தான் வில்லத்தனத்தில் புது முத்திரை பதித்தார் சத்யராஜ். அப்படத்தில் அவர் பேசிய தகடு தகடு வசனம் இன்றளவும் பிரபலமானது என்பது நினைவிருக்கலாம்.

கமலுக்கு கன கச்சிதமாக பொருந்திய காக்கிசட்டை நரேனுக்கு எப்படி இருக்கும் என்பது படத்தைப் பார்த்தால் தான் தெரியும்.