ரஜினிக்கு மூன்று மணி நேர அழகு சிகிச்சை

posted Oct 20, 2011, 10:44 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 20, 2011, 10:45 AM ]
நடிகர் ரஜினிகாந்த் “ராணா” படத்தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததால் டயாலிசிஸ் செய்யப்பட்டது.
 பின்னர் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்றார். அங்கு குணம் அடைந்து சென்னை திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று ரஜினிகாந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தனது எடைக்கு எடை கல்கண்டு காணிக்கையாக வழங்கினார். அவருடன் மனைவி லதா,மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் உள்பட 16 பேரும் சென்று தரிசனம் செய்தனர்.  நடிகர் ரஜினிகாந்த் தற்போது பூரண குணம் அடைந்து விட்டார். பழைய பொலிவுடன் இருக்கிறார். தலை முடியை ஒட்டிவெட்டி முகத்தில் லேசாக தாடி வைத்திருந்தார். எப்போதும் போல் சுறுசுறுப்புடன் இருந்தார்.


 
“ராணா” படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார். இன்னும் 2 மாதங்களில் அவர் “ராணா” படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இதையடுத்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க எளிய உடற்பயிற்சிகள் செய்து வருகிறார்.   முக அழகை மெருகூட்டுவதில் அக்கறை செலுத்துகிறார். திருப்பதி செல்வதற்கு 2 நாட்களுக்கு முன் திடீரென்று ரஜினிகாந்த் காரில் சென்னை ஹாரிங்டன் சாலையில் உள்ள ஒரு பிரபலமான சலூனுக்கு சென்றார். அங்கு அவர் “பேஷியல்” (முக அழகு) சிகிச்சை செய்து கொண்டார். முடியை லேசாக வெட்டிக் கொண்டார். முகத்தில் தசைகளின் சுருக்கத்தை மறைக்க நிபுணர்கள் மூலம் மசாஜ் செய்யப்பட்டது. 3 மணி நேரம் வரை அவர் சலூனில் இருந்து முக அழகு செய்து கொண்டார். அதன் பிறகு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் “ராணா” படத்தில் நடிக்க முழுவதுமாக தன்னை தயார்படுத்திக் கொண்டு விட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.