இனி நோ ரீமேக்... ஒரிஜினல்தான்! - ஷங்கர்

posted Jan 31, 2012, 10:03 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 31, 2012, 10:03 AM ]
இனி ரீமேக் படங்களை எடுக்கவே மாட்டேன். நண்பன்தான் எனது கடைசி ரீமேக் படம். இனிவரும் படங்களை ஒரிஜினலாகவே எடுப்பேன், என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

ரஜினியின் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு ஷங்கர் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்தை வைத்து இயக்கிய படம் 'நண்பன்'.

பொங்கலுக்கு ரிலீசான இந்தப் படம் நகர்ப்புறங்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு ஓடினாலும், கிராமம் சார்ந்த பகுதிகளில் பெரிதாகப் போகவில்லை. இதன் தெலுங்குப் பதிப்புக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. ஆந்திராவில் பெரும்பாலானோர், இந்தப் படத்தின் ஒரிஜினல் இந்திப் பதிப்பான 3 இடியட்ஸைப் பார்த்துவிட்டதால், இந்த 'சினேகிதடு' தங்களைக் கவரவில்லை என்று கூறியுள்ளனர்.இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார் ஷங்கர்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நண்பன் படம் இந்தியிலிருந்து அப்படியே எந்தக் காட்சியும் மாறாமல் ரீமேக் செய்ப்பட்டது. 3 இடிட்ஸையும் மாற்றக்கூடாது, அதேநேரம் ஒரிஜினல் படத்தில் இருந்த உணர்வும் வேண்டும் என்பதால் நிறைய சவால் இருந்தது எனக்கு.

விஜய்யை அவரது வழக்கமான பாணியிலிருந்து மாற்ற முயற்சித்தேன். '3 இடியட்ஸ்' படத்தை விடவும் பாடல்கள் இதில் நன்றாக இருந்ததாக பாராட்டினார்கள். ரீமேக் படத்தை இயக்கியது எனக்கு புது அனுபவமாக இருந்தது. 3 இடியட்ஸ் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி கூட நண்பனை பாராட்டினார்.

ஆனால் இனி ஒருபோதும் ரீமேக் படங்களை இயக்கமாட்டேன். நண்பன்தான் அந்த வகையில் முதலும் கடைசியுமான ரீமேக்.

சொந்தத் தயாரிப்புகள்...

நான் தயாரித்த பல படங்கள் நன்றாக ஓடவில்லை. இதனால் நிறைய பணத்தை இழந்துவிட்டேன். நானே என் கை காலை சுட்டுக்கொண்டேன். அவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன். அடுத்து தயாரிப்பதற்காக நல்ல கதையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

அடுத்த ஹீரோ யார்? விக்ரம், அஜீத், சிரஞ்சீவி?

இவர்களில் யாருமில்லை. எந்தக் கதையையும் முடிவு செய்யவில்லை. எந்த ஹீரோவுடனும் இன்னும் பேசவில்லை. நிறைய கதைகள் மனதில் உள்ளன. அடுத்த படம் ஒரிஜினல் கதையாகவே இருக்கும். என்ன படம் என்பது குறித்து மார்ச்சில் அறிவிப்பேன். இப்போது விடுமுறையை அனுபவிக்கிறேன்," என்றார்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் நீங்களா என்று கேட்ட போது, "இதில் பெரிய சந்தோஷமில்லை. இந்தியாவிலேயே அதிக நம்பிக்கையான இயக்குநர் என்ற பெயர் கிடைத்தால்தான் சந்தோஷம்," என்றார் ஷங்கர்.
Comments