புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பு தரும் விஜய் ஆன்டனி

posted Dec 19, 2011, 8:23 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 19, 2011, 8:24 AM ]
ஆர்வமுள்ள வாய்ப்பு தேடும் புதிய கவிஞர்களுக்கு நான் படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பினை உருவாக்கித் தருகிறார் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.

தான் நாயகனாக நடித்து இசையமைக்கும் புதிய படமான 'நான்' படத்தில் ஒரு பாடலை எழுத அனைவருக்குமே ஒரு திறந்த வாய்ப்பினை அவர் உருவாக்கியுள்ளார்.

இந்தப் பாடலுக்கான ட்யூனை அவர் தனது www.vijayantony.com என்ற தளத்தில் பதிவேற்றி வைத்துள்ளார். இந்த ட்யூனை யார் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ட்யூனுக்கு ஏற்ப பாடலை உருவாக்கு விஜய் ஆன்டனியின் (vijayantonylyrics@gmail.com) என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

பொருத்தமான பாடலை எழுதியவர்களுக்கு தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பளிக்கவும் விஜய் ஆன்டனி முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இது நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த திட்டம். குறுகிய காலத்தில் 42 பாடகர்களை அறிமுகம் செய்துள்ளேன். ஆனால் பாடலாசிரியர்கள் விஷயத்தில் அப்படி செய்ய முடியவில்லை. அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. பாடலின் பல்லவியைக் கூட என்னுடைய இணைய தளத்தில் பதிவேற்றியுள்ளேன். அதற்குப் பொருத்தமாக சரணங்களை எழுதினால்போதும்.

இதன் மூலம் திறமையுள்ள நிறைய இளைஞர்களை அடையாளம் காண முடியும். அவர்களை தொடர்ந்து படங்களில் பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும்," என்றார்.

நான் படத்தில் விஜய் ஆன்டனி முதல் முறையாக நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அனுயா, ரூபா மஞ்சரி, விபா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஆனந்தத் தாண்டவம் படத்தில் நடித்த சித்தார்த் இன்னொரு நாயகனாக நடிக்கிறார்.

ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். இவர் மறைந்த இயக்குநர் - ஒளிப்பதிவாளர் ஜீவாவின் சிஷ்யர். விஜய் ஆன்டனியின் கல்லூரித் தோழர்!