விக்ரமின் கரிகாலன் படம் சிக்கலில்

posted Jan 25, 2012, 7:12 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 25, 2012, 7:13 AM ]
விக்ரம் “கரிகாலன்” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதையும் தலைப்பும் தனக்கு சொந்தமானது என்று போரூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். விக்ரம் மற்றும் இயக்குனர், தயாரிப்பாளரையும் இவ்வழக்கில் சேர்த்துள்ளார். இதனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
 
இப்படத்துக்காக ராஜா காலத்து ஆடை ஆபரணங்கள் பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டு உள்ளன. அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து “கரிகாலன்” பட தயாரிப்பாளர்கள் எஸ். பார்த்திபன், எஸ்.எஸ். வாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
ராஜசேகர் என்பவர் தொடுத்த வழக்கை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். திரைப்பட தயாரிப்பு சம்மேளனத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு தகுந்த ஆவணங்களோடு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் கதை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் இயக்குனரின் பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 
இந்த உறுதியான நிலையில் தான் நாங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். வழக்கை சந்திக்க வேண்டியது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களாகிய எங்கள் கடமை. இவ்வழக்கில் படத்தின் கதாநாயகனான விக்ரமை சம்பந்தப்படுத்துவது முற்றிலும் முறைகேடான செயல்.
 
இதனால் அவரின் புகழ் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுவதோடு அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ராஜசேகர் மீது மானநஷ்ட வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம். நேர்மையான முறையில் வழக்கை சந்திப்போம்.