இருக்கு ஆனால் இல்லை..!

posted Dec 18, 2011, 12:25 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 18, 2011, 12:25 AM ]
"உனக்காக நான் எவ்வளவு நேரம் பார்த்திருந்தன் தெரியுமா... ஒரு எஸ்.எம்.எஸ். ஆச்சும் பண்ணினியா? இல்லாட்டி ஒரு கோலாச்சும் பண்ணியிருக்கலாம் தானேடா... என்மேல பாசமிருந்தா இப்பிடியெல்லாம் செஞ்சிருப்பியா...? என்மேல உனக்கு கொஞ்சங்கூட அக்கறையில்லை... என்னை காக்க வைக்கிறதில உனக்கு அவ்ளோ ஆனந்தமா...?'

"என்னதான் இருந்தாலும் நீங்க அவ பக்கத்தில உட்கார்ந்து வந்தது தப்புதான்... அவ யாரு உங்கமேல அவ்வளவு அக்கறை காட்டிறதுக்கு... என்னைவிட அவ முக்கியமானவளா போயிட்டாளா..?'

இப்படியான சின்னச்சின்ன சண்டைகள் அடிக்கடி காதலன்+ காதலி, கணவன் + மனைவி ஆகியோரிடையே இடம்பெறுவது சகஜமே. காதலன், காதலிக்கிடையில் ஏற்படும் இப்படியான சண்டைகளால் பலரது காதல் வாழ்வு இடையிடையே முறிவடைவதும் உண்டு. அதேபோல் கணவன், மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற சண்டைகள் விவாகரத்துவரை சென்றுவிடுவதும் உண்டு.

உண்மையிலேயே இப்படியான சண்டைகள் எதனால் ஏற்படுகின்றன என நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா? அநேகமாக எல்லோரும் சொல்வது "புரிந்துணர்வின்மை' என்பதேயாகும். ஆனால், புரிந்துணர்வு என்பதற்கு அப்பால் "அன்பு' என்ற ஆதிக்கம் இருப்பதே மூலகாரணமாகும். உண்மை அதுதான், சிந்தித்துப் பாருங்கள். நெருங்கிப் பழகியவர்கள் சண்டைபிடிப்பதுதான் சகஜமான விடயம். தெரியாதவர்கள் சண்டைபிடித்தால் அதைப்பற்றி எவரும் அலட்டிக்கொள்வதில்லை. 

"நான் அவன்கூட எவ்வளவு பாசமா இருந்தன் தெரியுமா... எதையுமே மறைச்சதில்லை. எது செஞ்சாலும் அவனைக் கேட்டுத்தான் செய்வன். அப்படியிருக்கிறபோ எனக்குத் தெரியாம, எனக்குச் சொல்லாம அவன் பிறண்ட்ஸ் கூட சினிமாவுக்கு போயிருக்கான். எனக்கு எவ்வளவு கோவம் வந்திச்சு தெரியுமா..?' இப்படி சிலர் புலம்புவதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருப்பீர்கள். இது ஒரு சாதாரண விடயமாகத்தான் தெரியும். ஆனால், அதை ஆழமாகச் சிந்தித்தான் அதிலுள்ள பாசம் தெரியும். 
சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் கோவம் வருகிறதென்றால் உண்மையிலேயே பாசத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும். சிலருக்கு வேலை செய்துகொண்டிருக்கும்போது எவராவது குழம்பினால் கெட்டகோவம் வரும். ஏனெனில் அவர் அந்த வேலையை நேசிக்கின்றார் என்பதால் கோவம் வருகிறது. அதிகமாக நேசிக்கும் விடயத்தில் எவராவது தலையிட்டால் எங்களையும் மீறி வெளிப்படும் உணர்வு கோவம் என்றால் அது மிகையாகாது.

அதிகமாக காதலருக்கிடையில் அடிக்கடி இப்படியான குட்டிக் குட்டிச் சண்டைகள் ஏற்படுவது வழமை. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் இந்த செல்லமான சண்டைக்குணம் அதிகம். வரச்சொன்ன நேரத்தைவிட தாமதமாக காதலன் வந்தால் "ஏன் இவ்வளவு லேட்... எங்க போனிங்க... என்னைவிட உங்களுக்கு அப்பிடி என்ன முக்கியமாக வேலை...?' அப்பிடி இப்பிடின்னு பின்னி எடுத்திடுவாங்க நம்ம காதலிங்க. உடனே காதலன் "ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கிற... நானும் உன்மேல் பாசமா இருக்கேன்தானே...' என்று காதலி புரிஞ்சுக்காம தன்னோடு சண்டை பிடிப்பதுபோல் நம்ம காதலன் கோவப்படுவார். இதுதான் ஊடல் என்பது. 

என்னுடைய நண்பனொருவன் அடிக்கடி ஒரு வசனம் சொல்வான்... "ஊடல் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத கறிபோன்றது' என்பதே அதுவாகும். சற்று யோசித்துப் பார்த்தால் அதுதான் உண்மையென்பது புரியும். எமது வாழ்க்கை எப்பொழுதும் சந்தோஷமாக இருந்தால் அதில் இன்பம் காணமுடியாது. இடையிடையே சின்னஞ்சின்ன சண்டைகள் இருக்குமானால்தான் அந்த வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்கிறது. சண்டை ஒன்று ஏற்பட்டால்தான் சமாதானம் தேவைப்படும். அந்த சமாதானத்திற்காக பரிமாறுகின்ற அன்பு வார்த்தைகள் எம்மை புது உலகத்திற்கே அழைத்துச் செல்லும். 
சண்டையின் பின்பு வருகின்ற வார்த்தைகள் தேன்போல் இனிக்கும். அந்த வார்த்தைகளின் இன்பத்தினை உணர்ந்தால்தால் புரியும். சொல்லமுடியாத ஸ்பரிஷம் நம் உடலுக்குள் ஏற்படுவதை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பீர்கள். இந்த ஸ்பரிஷத்துக்காக சண்டைபிடிக்கின்ற காதலர்கள், கணவன்+ மனைவிமார் என பலர் இருக்கிறார்கள். ஆக, இதிலிருந்து இந்த ஊடலின் மகிமையை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றதல்லவா? 

இதைவிடுத்து எல்லோரும் சொல்வதுபோல் புரிந்துணர்வின்மை என்பது வேறுவிதமான சண்டைகளைக் குறித்து நிற்கும். அதாவது அங்கு பாசத்திற்கு இடமிருக்காது. வெறுமனே சண்டைதான் அடித்தளமாக இருக்கப்போகின்றது. இப்படியான சண்டைகள் குடும்ப வாழ்விற்கோ அல்லது நட்பிற்கோ ஆரோக்கியமானதல்ல. இதைத்தான் கண்மூடித்தனமான சண்டைகள் என்று குறிப்பிடுவார்கள். இப்படியான சண்டைகளால் நம் உடல் நலத்திற்குத்தான் கேடு. வீணான ரத்தக் கொதிப்பு, பிறஸர் போன்ற நோய்களை தேடிக்கொள்கின்ற சண்டைகளாக அது மாறிவிடும். இப்படியான சண்டைகளை தவிர்த்துக்கொள்வதே சிறந்ததாகும். 

முதலில் குறிப்பிட்டதுபோல் இரு பாசமான உள்ளங்களுக்கிடையில் ஏற்படுகின்ற குட்டிக் குட்டிச் சண்டைகளின் விளைவுகள்தான் மிகமுக்கியமானவை. ஆக, நாம் சண்டைக்கோழிகளாக இருக்கின்றோமே என எவராவது ஆதங்கப்பட்டால் அது உங்கள் தவறு. ஏனெனில் நீங்கள் அதிகம் பாசத்தினை எதிர்பார்க்கின்ற ஒருவர் என்பதனை மறந்துவிடாதீர்கள். அதீத பாசத்தின் வெளிப்பாடாகத்தான் இந்தக் கோவம் வெளிப்படுகிறது. அதற்காக எல்லா நேரமும் அப்படி என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளாதீர்கள். சிலசமயங்களில் உங்களை மீறி நீங்கள் கோவப்படுவீர்கள். இப்படியான கோவங்களால் உங்களுக்கு நஷ்டங்கள்தான் அதிகம் ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

என்ன...? ரொம்ப குழப்பமா இருக்கா? இப்போ நீங்க சண்டை பிடிக்க போகிறீர்களா... இல்லையா? இதுதானே குழப்பமாக இருக்கிறது. இருக்கு ஆனால் இல்லை... அதுபோல்தான் சண்டை பிடியுங்கள், ஆனால் சண்டை பிடிக்காதீர்கள். ஆ... ஆ... ஆ... தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறதல்லவா? உண்மை அதுதானே. அன்பாக சண்டை பிடியுங்கள்... ஆனால், ஆத்திரப்பட்டு சண்டைபிடிக்காதீர்கள். இதை உணர்ந்தால் உங்கள் வாழ்வு இனிமையாகவே இருக்கும். (நான் என்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி சின்னச்சின்ன சண்டைகள் பிடிப்பேன்... நீங்கள் எப்பிடி...?