வாழ்த்து அட்டையை மறந்தாச்சு... சுடசுட எஸ்எம்எஸ் பறந்தாச்சு...!

posted Dec 25, 2011, 8:38 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 25, 2011, 8:39 AM ]
என்னதான் இருந்தாலும் எங்க காலம் மாதிரி வராதுப்பு என்று அந்தக் கால தாத்தாக்கள், 'வருங்கால தாத்தாக்களிடம்' அடிக்கடி புலம்புவதைப் பார்த்திருப்போம். அட போங்கப்பா, இதையே எத்தனை காலத்துக்குத்தான் சொல்லிக் கொண்டிருப்பீங்க என்று நம்மவர்கள் சலித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் இவர்களும் அந்தக் காலத்துடன் ஒத்துப் போவார்கள். அதுதான் புத்தாண்டு வாழ்த்து.

ஜனவரி 1ம் தேதி என்றாலே நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடி ஜாலியாக இருக்க தான் எல்லாருக்கும் விருப்பம். ஆனால் நமக்கு இருக்கும் எல்லா நண்பர்கள், உறவினருடன் புத்தாண்டை கொண்டாடும் பாக்கியம் எல்லாருக்கும் வாய்க்காது.

சிலர் வெளியூர்களில், வெளி மாநிலங்களில், சிலர் வெளி நாடுகளில் கூட வசிக்கின்றனர். படிப்பு, வேலை, குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல காரணங்களுக்காக நண்பர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்களை பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் தொடர்பு கொள்ள கடித முறையே முன் காலங்களில் பெரிதும் பயன்பட்டது.

திருவிழாக்கள், பண்டிகைகள் போன்ற சிறப்பு நாட்களில் முன் காலங்களில் கடித தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டு வந்தன. அதன்பிறகு நெருங்கிய நண்பர்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் பரவ துவங்கின. வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் முதன் முதலில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி துவங்கியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன.

முதலில் கையெழுத்தாக அனுப்பப்பட்ட வாழ்த்து அட்டை பாரம்பரியம், பின்னர் நாளடைவில் அச்சிடப்பட்ட அட்டையாக உருமாறியது. அந்த வகையில் கடந்த 1843ம் ஆண்டு லண்டனில் முதல் அச்சிடப்பட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு புத்தாண்டு நாள், புனிதர்கள் நாள், பிறந்தநாள், திருமண நாள் என்று வாழ்த்து அட்டை தயாரிப்பு எரியாக்கள் நீண்டு கொண்டே போனது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை பட்டுவாடா செய்ய முடியாமல், தபால் துறையினர் அவதிப்பட்டதால் மறியல் செய்த சம்பவங்கள் கூட நடந்துள்ளது. ஆனால் சமீபகாலமாக வாழ்த்து அட்டை அனுப்பும் முறை மக்கள் இடையே குறைந்து வரும் நிலையில், வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கத்தில் நவீன முறைகள் புகுந்துள்ளன.

வாழ்த்து அட்டையை கடையில் வாங்கி, அதற்கு ஸ்டாம்ப் ஒட்டி, தபால் பெட்டியில் போட்டு 2 -3 நாட்களுக்கு பிறகு பட்டுவாடா (சில நேரங்களில் 2-3 வருடத்திற்குப் பிறகு கூட வந்து சேர்வதுண்டு) என்ற பழைய முறைக்கு தற்கால மக்களிடையே ஆதரவு இல்லை. அதற்கு பதிலாக தொலைத் தொடர்பை எளிமைப்படுத்த வந்த மொபைல்போன் மூலம் வாழ்த்து அனுப்புவது பிக்கப் ஆகியுள்ளது. எஸ்.எம்.எஸ் என்ற குறுந்தகவல் முறை, இ-மெயில் முறை உள்ளிட்ட நவீன முறைகள் இளம் வட்டத்தில் பாப்புலராக உள்ளன.

சொல்ல வேண்டிய செய்திகளை சுருக்கமான சில வார்த்தைகளில் 'டைப்' செய்து குறிப்பிட்ட நண்பர்கள், உறவினர் என்று பலரின் செல்போன்களுக்கு ஒரே நேரத்தில் வாழ்த்து போய் சேரும் வகையில் தற்போது வாழ்த்து அனுப்பும் முறை வளர்ந்து உள்ளது. அதுவும் டைப் செய்யக் கூடத் தேவையில்லை. யாராவது நமக்கு அனுப்பும் வாழ்த்துச் செய்தியுடன் ஏதாவது ஒரு வார்த்தையை மட்டும் எக்ஸ்டிராவாக சேர்த்து அப்படியே பார்வர்ட் செய்து வாழ்த்தி விடலாம்.

குறிப்பிட்ட பண்டிகைகள், திருவிழாக்கள், பிரபல நாட்களில் செல்போன் பயன்படுத்தும் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வாழ்த்துகளை பரிமாறி கொள்ளவதால் மொபைல் போன் நெட்வார்க் கூட தடைப்படுவது உண்டு.

இதனை தவிர்க்க முக்கிய நாட்களில் சில நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ்.களை அளிக்க மறுத்து, ஒவ்வொரு எஸ்எம்எஸ்.க்கும் 50பைசா முதல் 1.50 பைசா வரை வசூலிக்கின்றன. ஆனாலும் மக்களிடையே வாழ்த்துகள் பரிமாறும் முறை மட்டும் குறைந்தபாடில்லை.

இப்ப சொல்லுங்க, புத்தாண்டு வாழ்த்து அனுப்புவதில் அந்தக் காலம் போல இந்தக் காலம் இல்லைதானே?