'உச்சா' போனதை படம் பிடித்துக் காட்டிய கூகுள்-'கேஸ்' போட்ட பிரெஞ்சுக்காரர்!

posted Mar 2, 2012, 10:53 AM by Sathiyaraj Thambiaiyah
கூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷன் (தெரு நிகழ்வுகளைக் காணும் வசதி) மூலம் தனது வீட்டு முன் பகுதியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததை படமாக்கி வெளியிட்டு தனக்கு பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாக கூகுள் மீது பிரெஞ்சுக்காரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் மெய்ன் எட் லாய்ர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஜான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டு முன்பகுதியில் சிறுநீர் கழித்துள்ளார். இது கூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷனில் பதிவானது. உடனே கூகுள் அந்த புகைப்படத்தில் உள்ள ஜானின் முகத்தை மங்கலாக்கி அதை இணையதளத்தில் வெளியிட்டது.

என்ன தான் முகம் மங்கலாக இருந்தாலும் ஜானின் கிராமத்தினர் ஏய், இது நம்ம ஜான்ய்யா என்று கண்டுபிடித்து கேலி பேசி சிரிக்க ஆரம்பித்தனர். இதனால் ரொம்ப ஷேமாகி விட்டது ஜானுக்கு.

ஆத்திரமடைந்த அவர் கூகுள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தான் சிறுநீர் கழிக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்காக ரூ. 6,55,950 நஷ்ட ஈடாக கேட்டுள்ளார். இந்த வழக்கு ஆங்கர்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு கூகுள் நிறுவனத்தின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் வரும் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.

ஸ்ட்ரீட் வியூ வசதி மொத்தம் 30 நாடுகளில் உள்ளது. இந்த வசதி கடந்த 2008ம் ஆண்டில் இருந்து பிரான்ஸில் உள்ளது.
Comments