விளையாடும் குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள்?

posted Jan 8, 2012, 9:40 AM by Sathiyaraj Kathiramalai
துறுதுறுவென ஓடியாடி விளையாடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.நெதர்லாந்தில் உள்ள வியு யுனிவர்சிட்டி மெடிகல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் அமிகா சிங் தலைமையிலான குழுவினர் குழந்தைகளின் உடல் அசைவுக்கும் கல்வித் திறனுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினர்.அமெரிக்காவில் ஏற்கனவே நடத்தப்பட்ட 10 ஆய்வுகள் மற்றும் கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட தலா 1 ஆய்வு முடிவுகளை ஆராய்ந்தனர்.
6 முதல் 18 வயதுக்குட்பட்ட வயதினரை உள்ளடக்கிய இந்த ஆய்வுகள் 53 முதல் 12,000 பேர் இந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடல் இயக்கத்துக்கும் கல்வித் திறனுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது எப்போதும் துறுதுறுவென ஓடியாடி விளையாடும் சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களைவிட படிப்பில் சிறந்து விளங்குவது தெரியவந்தது.
விளையாடும்போது உடல் உறுப்புகள் இயங்கும். இதனால் அதிகப்படியான ரத்தம் மற்றும் ஆக்சிஜன் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நோர்பைன்பிரின் மற்றும் எண்டோர்பைன்ஸ் அளவு அதிகரித்து மூளை சுறுசுறுப்படைகிறது.
இதன்மூலம் புதிய நரம்பு செல்கள் உண்டாவதால் கல்வியில் சிறந்து விளங்க காரணமாகிறது. உடற்பயிற்சியும் இதுவிஷயத்தில் பலன் அளிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Comments