மரபணு பாரம்பரிய நோய்களை முற்றிலுமாக அழித்து விடும்

posted Jan 22, 2012, 5:30 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 22, 2012, 5:33 PM ]
புதிதாக நடத்தப்படவுள்ள மரபணு ஆராய்ச்சியின் விளைவாக பல்வேறு பாரம்பரிய நோய்களை முற்றிலுமாக அழித்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
இந்த ஆய்வு பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ளது.

இந்த ஆய்வில் மைட்டோகொண்ட்ரியா(Mitochondria) என்ற உயிரணுக் கூறு வழியாக தாயிடம் இருந்து பிள்ளைக்கு வருகின்ற உடல் கோளாறுகளை தடுக்கின்ற வழிமுறை பற்றி ஆராயப்படவுள்ளது. மைட்டோகொண்ட்ரியா என்பது மனித உயிரணு கிட்டத்தட்ட அனைத்திலும் உள்ள நுண் வஸ்துகள் ஆகும்.
பெற்றோரிடம் இருந்து மரபணுக்களின் வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பல நோய்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மனிதனுடைய மூளையும், நரம்பு மண்டலமும், தசைகளும் ஒழுங்காக வேலை செய்ய இந்த மைட்டோகொண்ட்ரியாக்கள் அவசியம்.
பாதிப்புள்ள மைட்டோகொண்ட்ரியாவை உடைய ஒரு தாய் அதனை கருவில் உள்ள தனது பிள்ளைக்கும் தந்துவிடுகிறாள். அப்படித் தருவதை தடுப்பதற்கு மருத்துவத்தில் இதுவரை வழி எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது.
ஆனால் பாதிப்புடைய மைட்டோகொண்ட்ரியா தாயிடம் இருந்து பிள்ளைக்கு வருவதை தடுக்க முடியும் என நியூகாஸ்ல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆரோக்கியமான பெண்ணொருத்தியின் கரு முட்டையில் இருந்து பாதிப்பில்லாத மைட்டோகொண்ட்ரியாவை பிரித்தெடுத்து அதனை தாயின் கரு முட்டையில் இருக்கும் பாதிப்புடைய மைட்டோகொண்ட்ரியாவுக்கு பதிலாக வைக்கும்போது, தாயின் வழியாக பிள்ளைக்கு வரக்கூடிய பாரம்பரிய நோய்களைத் தடுக்க முடியும் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.