எளிய முறை மூலம் புற்றுநோயைத் தடுக்கலாம்

posted Dec 9, 2011, 9:22 AM by Sathiyaraj Kathiramalai
வாழ்வியல் முறைகளில் சில எளிய மாற்றங்கள் செய்வதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்று லண்டன் மருத்துவர்கள் கூறுகின்றனர். புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் முதலிடத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. நுரையீரல் புற்றுநோய் மட்டுமன்றி பித்தப் பை, சிறுநீரகம், இரப்பை உள்ளிட்ட பகுதிகளிலும் புற்றுநோய் உருவாக புகைப்பழக்கம் காரணமாக அமைந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 25 பேரில் ஒருவருக்கு அவர் சார்ந்த பாதிப்பு தொழிலால் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ரசாயனம் மற்றும் ஆஸ்பெஸ்டார் கூரையின் கீழ் பணிபுரிவோருக்கு புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

33 பேரில் ஒருவருக்கு தொற்றுநோய் மூலம் புற்றுநோய் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. கருப்பை புற்றுநோய் உருவாக்குவதில் பாப்பிலோமா வைரஸ்(ஹெச்பிவி) முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார். 2010-ம் ஆண்டு லண்டனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 1,06,845 பேர்களில் 34 சதவீதம் பேர் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தனர். இவர்களிர் சிலருக்கு மதுபான பழக்கமும் இருந்துள்ளது. கூடுதல் எடை உள்ளவர்களும் புற்றுநோயால் தாக்கப்பட்டது கண்டறியப்பட்டது. ஆண்களில் 6.1 சதவீதம் பேர்(9,600) போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிடாததால் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேபோல 4.6 சதவீதம் பேருக்கு(7,300) அவர்கள் சார்ந்த தொழில் காரணமாகவும், 4.1 சதவீதம் பேர்(6,500) மதுபான பழக்கம் காரணமாகவும், 3.5 சதவீதம் பேர்(5,500) கூடுதல் எடை காரணமாகவும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களில் 6.9 சதவீதம் பேர்(10,800) கூடுதல் எடை உள்ளவர்களாக இருந்தனர். 3.7 சதவீதம் பேருக்கு(5,600) ஹெச்பிவி மூலமாகவும், 3.4 சதவீதம் பேருக்கு(5,100) போதுமான பழங்கள், காய்கறிகள் சாப்பிடாததாலும், 3.3 சதவீதம் பேருக்கு(5,000) மதுபான பழக்கம் காரணமாகவும் புற்றுநோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

புகையிலை, போதிய பழம், காய்கறிகள் சாப்பிடாதது, கூடுதல் எடை, மதுபான பழக்கம், போதுமான அளவு சூரிய ஒளி படாதிருத்தல், பணிச் சுமை, நோய் தொற்று, கதிர்வீச்சு, போதிய உடற்பயிற்சி இல்லாதது, தாய்ப்பால் புகட்டாதது, ஹார்மோன், பச்சை மாமிசம், போதிய நார்ச்சத்து உணவுகளை சாப்பிடாதது, அதிகம் உப்பு சாப்பிடுவது புற்றுநோய் காரணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. மதுபானம் சாப்பிடுவதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், ஆண்களுக்கு இரப்பைக் குடல் புற்றுநோய் ஆய்வில் தெரியவந்துள்ளது. போதிய அளவு பழங்கள் சாப்பிடாததால் 9 சதவீதம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேக்ஸ் பார்கின் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.