புற்றுநோயை கட்டுப்படுத்தும் திராட்சை

posted Feb 19, 2012, 6:39 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 19, 2012, 6:40 PM ]
திராட்சை விதைகளில் உள்ள சத்துகள், புற்றுநோய் கிருமிகளை விரட்டி நோயை கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உடலில் உள்ள மற்ற ஆரோக்கியமான செல்களை இவை பாதிக்காது என்பது கூடுதல் சிறப்பு. கொலராடோ பல்கலைக்கழக புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையில் இணைந்து புற்றுநோய்க்கான தீர்வு குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.

அதில்தான் திராட்சை விதையின் மகத்துவம் தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து ராஜேஷ் கூறியதாவது: உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தீர்வுக்கான ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன.

சமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது. பொதுவாக அனைத்து வகையான புற்றுநோய் கிருமிகளுமே மிக வேகமாக பரவக்கூடியவை.

இவற்றை கட்டுப்படுத்த கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் கிருமிகள் பன்மடங்கு பெருகி உயிர்க்கொல்லியாக மாறும் ஆபத்து உள்ளது. கீமோதெரபி  முறையில் சிகிச்சை அளிக்கப்படும்போது நோய்க் கிருமிகள் மட்டுமின்றி ஆரோக்கியமான செல்களும் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.

இந்நிலையில் திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோய் கிருமிகளை வேகமாக அழிப்பதுடன் ஆரோக்கியமான செல்களை பாதுகாப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் எந்தவித பாதிப்போ பக்க விளைவுகளோ இருக்காது என்றார்.