சரிவிகித உணவால் இதயநோயை இதமாய் தடுக்கலாம்

posted Dec 2, 2011, 9:42 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 2, 2011, 9:43 AM ]
இன்றைய அவசர யுகத்தில் அரக்க பரக்க வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் கிடைப்பதை உண்டுவிட்டு அலுவலகத்திற்கு செல்வதில் குறியாக இருக்கின்றனர். சரிவிகித உணவு உட்கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இதனால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயபாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும். சரிவிகித உணவு உட்கொண்டால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள முடியும். இதயநோய் வராமல் பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்கள்.
மதுவும் புகையும்

மதுப்பழக்கம் இதயத்திற்கு எதிரியாகும். இது இதயத்தின் தசைகளை வலுவிலக்கச்செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் எற்படுகிறது. எனவே அதிக அளவு மதுவுக்கு அடிமையானவர்கள் படிப்படியாக குறைத்து பின்னர் அதனை முற்றிலும் விட்டு விடுவது இதயத்திற்கு நன்மை தரும்

புகைப்பழக்கம் கொண்டவர்களின் வாழ்க்கை 15 முதல் 25 ஆண்டுகள் வரை குறைந்து விடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே புகைப்பதை நிறுத்தினால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.

உணவும் உடற்பயிற்சியும்

சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். அது இதயத்திற்கு இதம் தருவதோடு உடலையும், உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக்கும்.

உணவில் உப்பை குறைக்கலாம்

வெள்ளை அரக்கன் எனப்படும் உப்பு இதயத்திற்கு எதிரியாகும். இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் பாதிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.

தியானம்

அளவிற்கதிமாக புகையோ, மதுப்பழக்கமோ இதயத்திற்கு ஆபத்தானது. இது இதயநோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே யோகா, தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். குடும்பத்தினரும் ஒரு ஜாலி ட்ரிப் சென்று வரலாம்.

மருத்துவ பரிசோதனை

கெட்ட கொழுப்பானது ரத்த நாளங்களில் உட்புகுந்து இதயத்திற்கு ரத்தம் செல்வதை தடுக்கும். எனவே அதிகம் குண்டாகாமல், உடலில் கொழுப்பு சேரவிடாமல் பார்த்துக்கொள்வது இதயத்திற்கு இதம் தரும்.

35 வயதை தாண்டிவிட்டாலே அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். உடலில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றை செக்அப் செய்து கொள்வது பாதுகாப்பானது.

மரபியல் ரீதியான நோய்கள் இருப்பவர்களுக்கு பரிசோதனைகள் அவசியம். பெற்றோருக்கு நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் இருக்கும் பட்சத்தில் நீங்களும் உங்களின் உடலை பரிசோதனை செய்வது அவசியம். நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்புசத்து போன்றவற்றை பரிசோதனை செய்து அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளவும்.

சிரிப்பு மருந்து

கவலைகளை புறந்தள்ளிவிட்டு அதிகமாய் சிரியுங்கள். இது இதயத்திற்கு இதம் உண்டாக்கும். மனதை லேசாக வைத்துக்கொண்டால் இதயநோயாவது ஒன்றாவது.