சர்க்கரை நோய் இருக்கா? கண்ணை கவனிங்க..!

posted Feb 3, 2012, 10:30 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 3, 2012, 10:30 AM ]
நீரிழிவு நோயாளிகளில் 56 லட்சம் பேர் கண் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். 20 லிருந்து 74 வயது வரை உள்ளவர்கள் கண்பார்வையை இழப்பதற்கு நீரிழிவு வியாதி மிகமுக்கிய காரணமாக உள்ளது. இதற்கு நுண்ணிய நரம்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளே கண்களை தாக்கி பார்வைக்குறைபாடுக்கு காரணமாகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்களில் பாதிப்பு

நீரிழிவினால் கண்பார்வை மங்குதல், கண்வலி, இரட்டை பார்வை, அடிக்கடி கண்கட்டி, கால் முகம் வீங்குதல், வாந்தி, சிறுநீரில் புரதம் ஒழுகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பார்வை இழப்பு

சர்க்கரை நோய் தாக்கப்பட்டுள்ளவர்களுக்கு லேசான பார்வை கோளாறுகளும்,சிலருக்கு கடும் பார்வையிழப்பு கூட ஏற்படலாம். இதற்கு காரணம் நமது கண்களின் உட்புறம் இறுதியில் உள்ள விழித்திரைக்குள் பல மெல்லிய இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதே. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது முதலில் பாதிக்கப்படும் இரத்தக் குழாய்கள் இவையே. இதனையே விழித்திரை வலுவிழப்பு என்கின்றனர் மருத்துவர்கள்.

ரத்தக்கசிவு நோய்

நீரிழிவு நோய் குறைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரை நாளங்கள் வலுவிழந்து வீங்கிப் பெருத்து அல்லது கொழுப்புப் படிவுகளுடன் காணப்படுகிறது. இதுவே மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, விழித்திரையில் உள்ள மெல்லிய நாளங்கள் பாதிப்படைந்து அவற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டு பின் அடைபடும். உறுதியற்ற புதிய இரத்த நாளங்கள் விழித்திரையில் உண்டாகும். அவையும் எளிதில் உடைந்து இரத்தக்கசிவு ஏற்படும்.

இது அதிகமானாலும்,விழித்திரையின் முக்கியப் பாகங்களில் ஏற்பட்டாலும் பார்வையிழப்பு ஏற்படும். கசியும் இரத்தக் குழாய்களை லேசர் சிகிச்சை மூலம் உறைய வைக்க முடியும்.தழும்புததிசுக்களால் விழித்திரை விலகல் ஏற்படும் போது,அறுவை சிகிச்சை செய்து மீண்டும் விழித்திரையை ஒட்ட வைக்க முடியும்.

பரிசோதனை அவசியம்

முறையாக சர்க்கரை பரிசோதனை மட்டுமல்லாமல்,கண் பரிசோதனையையும் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதற்கு முன்னர் ஆரம்ப கட்டடத்திலேயே கண்டறிய முடியும். மேலும் முறையான உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் நீரிழிவு நோயின் தீவிரத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமையல் எண்ணெய்கள்

உணவில் கலோரிகளை அதிகரிப்பது சமையல் எண்ணெய்தான். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தவிடு எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன் படுத்தலாம். இவற்றையும் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். அதேசமயம் நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றை தவிர்ப்பது நல்லது.

பயறுகள், சூப் வகைகள்

நீரிழிவு நோயாளிகள் சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி, தாகம் எடுத்தால். வெள்ளரி, அரிசிப்பொரி, மோர், கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு, வாழைத்தண்டு சூப், அருகம்புல் சூப், நெல்லிக்காய் சாறு, கொத்தமல்லி சூப், கறிவேப்பிலை சூப், இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

தவிர்க்கவேண்டிய பழங்கள்

மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா, திராட்சை, சீதாப்பழம், இந்த பழங்களில் மாவுச்சத்தும், கலோரியும், சர்க்கரையை உயர்த்தும் திறனும் அதிகம் என்பதால், சர்க்கரை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
Comments