குழந்தைகளுக்கு மருந்தாகும் வில்வப்பூக்கள்

posted Dec 23, 2011, 8:23 AM by Sathiyaraj Thambiaiyah
சிவ ஆலயங்களில் தல விருட்சமாக வளர்க்கப்படும் வில்வமரம் தெய்வீக மரம் மட்டுமல்ல. மருத்துவ குணம் நிறைந்ததுமாகும். மரத்தின் அனைத்துப்பகுதிகளும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. வில்வப்பூக்கள் குழந்தைகளின் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வில்வப்பூக்கள் சமையலில் உண்ணும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பூக்களைக் கொண்டு சாம்பார் வைக்கலாம். வடைமாவில் கலந்து வடை செய்யலாம். இதனால் குடலில் உள்ள வாயு நீங்கும். உடல் லேசாகும்.

வயிற்றுவலி நீங்கும்


வில்வப்பூவை பொடி செய்தும் பயன்படுத்தலாம் கசாயமாகவும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு வயிற்றில் மாந்தம், பேதி ஏற்பட்டால் வில்வப்பூவை உலர்த்தி தூளாக்கி கால் கரண்டி அளவு எடுத்து பசும்பாலில் கலக்கிக் கொடுக்க நிவாரணம் ஏற்படும்.

மலேரியா காய்ச்சல்

கடுமையான காய்ச்சல், மலேரியா காய்ச்சலுக்கு வில்வப்பூ சிறந்த மருந்து. வில்வப்பூ, துளசி,சமஅளவு, எடுத்து சாறு தயாரித்து தேன் கலந்து சாப்பிடவேண்டும். தினம் இருவேளை ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வர கடுமையான காய்ச்சல் குணமடையும்.

உள்காய்ச்சல் குணமடையும்


வில்வப்பூ, வேப்பம்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்து நெய்யில் வதக்கி அம்மியில் நன்றாக அரைத்து தேன்கலந்து கொட்டைப் பாக்கு அளவு உருண்டையாகச் செய்து வேளைக்கு ஒரு உருண்டையாக காலை, மாலை சாப்பிட்டு வர மூன்று நாட்களில் உள் காய்ச்சல் குணமடையும்.