தோல் நோய்களை குணமாக்கும் தாமரைக்கிழங்கு

posted Oct 19, 2011, 9:54 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 19, 2011, 9:54 AM ]
நீர்த்தாவரங்களின் ஒன்றான தாமரை கொடி இனத்தைச் சேர்ந்தது. நீருக்குள்ளேயே படர்ந்து வளரக்கூடியது. இதில் எத்தனையோ வகை உள்ளன. அவற்றில் வெண்தாமரை, செந்தாமரை குறிப்பிடத்தக்கவை. இந்த தாமரையின் அடிப்பகுதியில் கிழங்குகள் காணப்படுகின்றன.தாமரை மலரைப்போல தாமரைக்கிழங்குகளுக்கும் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது. கண்நோய், கண் எரிச்சல், போன்று கண்கள் தொடர்புடைய நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. கண்பார்வையும் தெளிவடையும்.

அடங்கியுள்ள சத்துக்கள்

தாமரைக்கிழங்கில் வைட்டமின் சியும் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடென்டலும் உள்ளது. இதில் உள்ள பி – 6 வைட்டமின் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தேவையற்ற டென்சன் அதன்மூலம் ஏற்படும் தலைவலியை போக்குகிறது. மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

தாமரைக்கிழங்கில் காப்பர், துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. தாமரைக்கிழங்கானது இனிப்பு மிக்கது. உடலில் சோடியம் , பொட்டாசியம் நிலையை 1:4 என்ற நிலையில் தக்க வைத்திருக்கும்.

இதயநோய் தீர்க்கும்

இருதயம் தொடர்புடைய நோய்களையும் போக்க வல்லது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, இருதயத்திற்கு பலத்தை உண்டாக்கும். இந்த கிழங்கை நன்றாக உலர்த்தி, இடித்து சலித்து சூரணமாக்கி கொள்ள வேண்டும். கொஞ்சம் தூளை எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இதனால் ரத்த ஓட்டம் சீராகி இதயநோய் ஏற்படும் வாய்ப்பு குறையும். தேன் கிடைக்கவில்லை என்றால் தாமரைக்கிழங்கு சூரணத்துடன் சிறிது சர்க்கரையைச் சேர்த்தும் சாப்பிடலாம். காலை மாலை இருவேளை சாப்பிட நோய்கள் நீங்கும்.

பித்தநோய் கட்டுப்படும்

நெஞ்சில் கபம், காசநோய், போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சிறிதளவு தாமரைக்கிழங்கு தூளுடன் இஞ்சிச்சாற்றைக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட கபம் கரையும், காசநோய் குறையும். இது எளிய வைத்தியமுறையாகும். இந்த தூளை காய்ச்சிய பசும்பாலில் கலந்தும் தாரளமாகச் சாப்பிடலாம். அதற்குரிய மருத்துவ குணத்தில் மாற்றம் இருக்காது. பித்தம் தொடர்புடைய தொல்லைகளும் நீங்கும். வயிற்றுவலி, பொறுமல் போன்றவையும் சமனப்படும்.

தோல் நோய்கள் குணமடையும்

தாமரைக்கிழங்கு தூளைக்கொண்டு கஷாயம் இறக்கலாம். இத்தூளில் கொஞ்சம் நீருடன், கலந்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி உள்ளுக்குள் சாப்பிடலாம். இரத்தம் சுத்தமாகும். இத்துடன் தோல் தொடர்புடைய சொறி, சிரங்கு, தேமல் போன்றவையும் குணமடையும். இந்த கஷாயத்தோடு நல்லெண்ணெய்ச் சேர்த்து தைலப் பதத்தில் காய்ச்சி வடிகட்டி அதை தலைக்குத் தேய்த்து குளிக்கலாம். பித்தம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். தலைவலி போகும். கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்க வல்லது.