அகத்தின் அழகு, நகத்திலும் தெரியும்!

posted Jan 30, 2012, 9:18 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 30, 2012, 9:19 AM ]
நம்மில் பலர் முகத்தை அழகாக்குவதற்கு அக்கறை எடுத்துக் கொள்வதைப்போல உடல் உறுப்புகள் பலவற்றினை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல நகத்திலும் தெரியும்.

நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஏனெனில் உடலில் எற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் காட்டிக்கொடுத்துவிடும். நகத்தினை பாதுகாப்பது குறித்து அழகியல் நிபுணர்கள் கூறும் கருத்துக்கள் உங்களுக்காக.

அழகா வெட்டுங்க

நகங்கள் வெட்டுவது தனி கலை. ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்தால், அவை உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது வெட்டுவதை செய்வதை தவிருங்கள்.நகப் பளபளப்பு

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து,அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

மருதாணி நல்லது

நகங்களுக்கு மருதாணி இலை வைப்பது அழகோடு, ஆரோக்கியத்திற்கும் தொடர்புடையது. தினமும் நெயில் பாலிஸ் போடுவது கூடாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சில நாட்களாவது இடைவெளி விடும்போதுதான் நகத்தின் உண்மை தன்மையை அறிய முடியும்.

நகத்தின் மேல் பேஸ்கோட் தடவி அதன் மேல் விரும்பும் நிறத்தில் நகச்சாயத்தை இரண்டு முறை தடவ வேண்டும். அ‌ப்போதுதா‌ன் ‌நிற‌த்‌தி‌ன் அட‌ர்‌த்‌தி அழகாக இரு‌க்கு‌ம். விரல்களுக்கு நடுவே பஞ்சினை வைத்து விட்டு தடவுவதால் நகச்சாயம் விரல்களுக்கிடையே பரவுவதை தடுக்கலாம். நகச்சாயம் விரல்களில் பரவிவிட்டால் ஒரு குச்சியை நெய்ல் பாலிஷ் ரிமூவரில் நனைத்து அதை அகற்றலாம்.

பற்களால் கடிப்பது கூடாது

நகத்தை பற்களால் கடிக்க கூடாது. இது நரம்பு கோளாறு உள்ளது என்பதை எடுத்துக்காட்டும். துணி துவைக்க தரமான சோப்புகளை பயன்படுத்துங்கள். வீட்டு வேலை முடிந்ததும் கைகளை கழுவுங்கள். சிறிது நேரம் கழித்து கிரீம் தடவுங்கள். இதனால் நகங்களை உடையாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

பெடிக்யூர், மெனிக்யூர்

நகங்கள் காய்ந்து வறண்ட தன்மையுடன் இருந்தால் அதற்கு ஏற்ப மாய்ச்சரைசர் கிரீம்களை தடவவேண்டும். வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவேண்டும். அதில் நகமும், கைகளும் நன்றாக மூழ்கும் படி ஊறவைக்கவேண்டும். இது கைகளும், நகமும் வறட்சியடைவதை தடுக்கும்.

சிலருக்கு நகங்கள் வளராமல் குட்டையாக இருக்கும். அவர்கள் மாதம் ஒருமுறையாவது, பெடிக்யூர், மெனிக்யூர் செய்து கொள்ளவேண்டும். கை, கால்களை நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் நகம் நன்றாக வளரும்.

ஊட்டச்சத்துள்ள உணவு

நகங்களை கடினமாக வைக்க புரோட்டீன் மற்றும் சத்துள்ள உணவை சாப்பிடவும். நகத்தின் வளர்ச்சிக்கு கரோட்டின் என்ற புரதச்சத்து தான் காரணம். உணவில் புரதம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் ஏ, கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழம், காய்கறிகளை சாப்பிடுவது பளபளப்பு தரும்.துத்தநாகம், வைட்டமின் பி உணவுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் எளிதில் உடையும். பட்டை பட்டையாக பிரியும். எனவே இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினந்தோறும் 10 டம்ளர் தண்ணீர் அருத்துவது நக அழகுக்கு தேவையானது. மேலும் பழரசங்கள் அருந்துவதும் நகத்திற்கு வலிமை தரும்.