அன்றாடம் உண்ணும் காய்கறிகளிலுள்ள சத்துக்கள்

posted Oct 23, 2011, 10:00 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 23, 2011, 10:30 AM ]
நாம் உண்ணும் உணவில் தினந்தோறும் ஏதாவது ஒரு காய்கறியினை சேர்த்துக்கொள்கிறோம். அந்த காய்கறிகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன? அவற்றை எதற்காக உண்கிறோம் என்பதைப்பற்றி பெரும்பாலோனோருக்குத் தெரிவதில்லை. காய்கறிகள் நம் உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பதோடு நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. ஒரு சில முக்கியமான காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.


கத்தரிக்காய்

அன்றாடச் சமையலில் இடம் பெறும் மிக முக்கியமான காய் கத்தரி. இதில் பாஸ்பரஸ், ஃ போலிக் அமிலம், வைட்டமின் பி, சி போன்றவை உள்ளன. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலுக்கும் உதவும்.

பீன்ஸ்

பீன்ஸ் காயில் புரதச்சத்தும் கல்சியம் சத்தும் அதிகம் உள்ளது. இரும்புச்சத்துடன், உயிர்சத்துக்களான ஏ,பி,சி ஆகியவை உள்ளன. இதனால் எலும்பு வளர்ச்சியடையும், உடல் உறுதிப்படும்.

பூசணிக்காய்

கொடி வகை காயான பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி போன்றவையும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்களும் காணப்படுகின்றன. இது இரத்தத்தை விருத்தி செய்யும்.

வெள்ளரிக்காய்

சமைக்காமல் சாப்பிடும் காயான வெள்ளரிக்காயில் ஃபோலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ், போன்றவை காணப்படுகின்றன. தவிர இதில் வைட்டமின் பி, சி யும் உள்ளன. வெள்ளப்பிஞ்சானது தாகத்தை தணிக்கும். உணவை எளிதில் ஜீரணமாக்கும்.