விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை

posted Nov 29, 2011, 7:49 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 29, 2011, 7:49 AM ]
உணவில் அளவுக்கதிகமாக பயன்படுத்தும் சர்க்கரை மெல்லக்கொல்லும் விஷம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேநீர், காபி, பழரசங்களில் அளவுக்கதிகமாக சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவது ஆபத்தானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் அதிக அளவில் உண்ணும் சத்து இல்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி மற்றும் சக்தியில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

ஆபத்தான சர்க்கரை

சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.

சர்க்கரை தேவையில்லை

சர்க்கரையை உபயோகிப்பதன் மூலம் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைகிறதாம். புரதச்சத்து அளிக்கப்படுகிறது. வைட்டமின் சி சத்து உறிஞ்சப்படுகிறது. தாது உப்புக்கள் அழிக்கப்படுவதால் உடலானது எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாகும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்

நோயாளிகளாக மாறும் குழந்தைகள்

குளிர்பானங்கள், செயற்கை உணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடல் குண்டாகிறது. இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நோயாளியாக உருவாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இனிப்பும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து விடுவதால், இதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.

புற்றுநோய் கட்டிகள்

உடலில் அதிகஅளவு சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோனுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கட்டிகளை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே தினமும் காபி அல்லது தேநீர் பருகும் போது குறைந்த அளவு சர்க்கரையை பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. நம்முடைய உடம்பின் ஆரோக்கியத்தை மெல்லக் கொல்லும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.