தூக்கம் கம்மியானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல்

posted Jan 18, 2012, 9:04 AM by Sathiyaraj Thambiaiyah
நள்ளிரவில் தூங்கி அதிகாலையில் கண்விழிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரவில் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு, இருதய நோயால் அல்லது மாரடைப்பால் உயிரிழப்பதற்கு மற்றவர்களை காட்டிலும் 48 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

6 மணி நேர தூக்கம் அவசியம்

இரவில் தாமதமாக தூங்குவதும், அதே சமயம் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாலையில் எழுவதும் இன்றைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் பழக்கமாக உள்ளது. உடற்பயிற்சிக்காக தூக்க நேரத்தை குறைக்கும் இளைஞர்களுக்கு அதில் உள்ள ஆபத்து புரிவதில்லை. ஏழு மணி நேரம் மிக நல்லது.முடியாவிட்டால் 6 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே ஆபத்தை அதுவே ஆபத்தாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளில், சுமார் 4.7 லட்சம் பேரிடம் வார்விக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் இது நிரூபணமாகியுள்ளது.

உடலோடு ஒட்டிய டைம்பாம்

"பின் தூங்கி முன் எழுவது உடலிலேயே கட்டிக்கொண்டிருக்கும் 'டைம்பாம்' க்கு சமம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ அல்லது தூக்கம் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் இருதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 48 விழுக்காடு அதிகமாக உள்ளது. மேலும் 'ஸ்ட்ரோக்'கால் இறப்பதற்கான வாய்ப்பும் மற்றவர்களை காட்டிலும் 15 விழுக்காடு அதிகமாக உள்ளது" என்று தெரியவந்துள்ளதாக வார்விக் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் சர்க்கரை நோயும், உடல் பருமனும் இணைந்த டயப்ஸிட்டி (diabetes and obesity) - என்ற நோய் வர அதிக வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

குறைவான தூக்கம் ஆபத்து

லண்டனில் சமீபத்தில் மாரடைப்பு உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தூக்கமின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இயந்திர வாழ்க்கையில் உழலும் பின் தூங்கி முன் எழுபவர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் சென்னை மற்றும் மும்பையை சேர்ந்த முன்னணி இருதய நோய் மருத்துவ நிபுணர்கள்.

முதல்முதலாக மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 60 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர்,குறைவான நேரம் தூங்குபவர்களாகவும்,அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களாகவுமே இருப்பது தெரியவந்துள்ளது" என்கிறார் இருதய சிகிச்சை நிபுணரான மேத்தா. எனவே சரியான தூக்கமே உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments