வர வர ஞாபக மறதி அதிகமாயிருச்சா? சத்தான உணவுகளை சாப்பிடுங்க!

posted Feb 20, 2012, 10:19 AM by Sathiyaraj Thambiaiyah
இங்கதான் வச்சேன், ஆனா எங்க வச்சேன்னு தெரியலையே? என எதையாவது தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அவ்வப்போது செய்யவேண்டிய முக்கியமான வேலைகள் கூட மறந்து விடுகிறதா?. 'கஜினி'யாகி விட்டோமே என்று பயப்படத் தேவையில்லை. இந்த ஞாபக மறதிக்கு முக்கியக் காரணம் மூளையின் நினைவுச் செல்கள் சிறிது சிறிதாக செயல் இழந்து வருவதுதான்.

நினைவுத்திறன் குறைபாடு இன்றைக்கு பெரும்பாலோனோருக்கு ஏற்பட்டு வருகிறது. இவர்கள் எண் விளையாட்டு, குறுக்கெழுத்துப் புதிர் போன்ற புத்திசாலித்தனமான விளையாட்டினை விளையாடுவதன் மூலம் நினைவுத்திறனை மீட்க முடியும் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் உண்ணவேண்டிய ஊட்டச்சத்துணவுகளையும் பரிந்துரைத்துள்ளனர்.

பச்சைக் காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகளான ப்ரூகோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கீரைகள் போன்றவற்றில் வைட்டமின் பி6, பி12 மற்றும் போலேட் உள்ளது. இது மூளை நினைவுத்திறனுக்கு ஏற்றது. அல்சீமர் நோயாளிகள் இவற்றை அதிகம் உண்ண பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். இவற்றில் உள்ள உயர்தர இரும்புச்சத்து மன அழுத்தம் தொடர்பான நோய்களையும் தடுக்கிறதாம். தினசரி உணவில் கேரட் சேர்த்துக்கொள்வதன் மூலம் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தானியங்கள்

சிவப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் தானியவகைகள் மூளைக்கு ஏற்றது. இவற்றை உண்பதன் மூலம் மூளை நரம்புகளுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்கிறது. இது மூளைக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்க செய்யும்.

முட்டை அவசியம்

முட்டையில் உள்ள புரதம், வைட்டமின் பி காம்ளக்ஸ், போன்றவை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நினைவுத் திறனை அதிகரித்து மூளை நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கிறது. எனவே தினசரி உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.

பச்சைத் தேநீர்

பச்சைத் தேநீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக பரிந்துரைக்கப்படுகிறது. இதில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் மூளையின் நியூரான்களை ஆரோக்கியமானதாக்குகிறது. எனவே அல்சீமாரால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் தேநீர் அருந்துவது சிறப்பானது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ப்ளுபெரீஸ் பழங்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் மூளைக்கு மிகவும் ஏற்றது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ப்ளு பெரீஸ் பழங்கள் நினைவாற்றலை அதிகரித்து கற்கும் திறனை உயர்த்துகிறதாம். மூளை தொடர்பான அழுத்தத்தினை குறைக்கிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய், அல்சீமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ப்ளு பெரீஸ் பழங்களை உண்ண கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஸ்ட்ராபெரீஸ் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்ஸ் அதிகம் உள்ளது. இவை மூளை நரம்புகளை பாதுகாத்து உடலுக்கு தேவையான கட்டளைகளை செலுத்துவதற்கு பாதுகாப்பளிக்கிறது.

பாதாம் பருப்பு

மீன்கள், பாதம் பருப்பில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கிறது. இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ், வைட்டமின் ஈ போன்றவை மூளையின் நரம்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் தடங்களின்றி நடைபெற வழிவகுக்கிறது. சுறுசுறுப்பு, விழிப்புணர்வு திறன் அதிகரிக்க இவற்றை தினசரி உணவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும் என நரம்பியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

டார்க் சாக்லேட்

சாக்லேட் பிரியர்கள் சந்தோசமாய் இனி சாக்லேட் சாப்பிடலாம் ஏனெனில் டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ மூளைக்கு உற்சாகம் தருகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறதாம். எனவே டார்க் சாக்லேட் சிறிதளவு சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே இந்த உணவுகளை உட்கொள்வதோடு மூளைக்குத் தேவையான உற்சாகமான பயிற்சியினை மேற்கொள்வதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கலாம் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments