சூரிய ஒளியில நடங்க ஆண்மை அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்

posted Feb 1, 2012, 9:56 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 1, 2012, 9:57 AM ]
சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்து ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரித்து ஆண்மை குறைபாட்டை நீக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மகப்பேறின்மையால் தவிக்கும் தம்பதியர் சூரிய ஒளியில் நடந்தாலே போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஏசி அறைக்கும் அடைபட்டு கிடக்கும் வாழ்க்கை. சூரிய ஒளி பட்டலே அலர்ஜி என எண்ணும் இளைய தலைமுறையினர் இன்றைய சூழலில் அதிகரித்து வருகிறது. இதனால் உடலிற்கு தேவையான வைட்டமின் டி சத்து கிடைக்காமல் ஆண்மை குறைவு போன்றவற்றால் அல்லாட நேரிடுகிறது.

அடைபட்டு கிடக்கும் ஆண்கள்

விடுமுறை நாட்களில் கூட வெளியில் செல்லாமல் தொலைக்காட்சி முன்பும், கணினியிலும் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது இன்றைய பல இளைஞர்களின் வாழ்க்கை. இவ்வாறு வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்றில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.

'வைட்டமின் டி' தரும் சூரியன்

டென்மார்க்கைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்விலும் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை பேரின்மையால் தவித்தவர்களுக்கு வைட்டமின் டி சத்தினை அளித்ததன் மூலம் அவர்களுக்கு மலடுத்தன்மை நீங்கியது தெரியவந்தது.

வைட்டமின் டி ஆனது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு கால்சியல் அளவையும் விந்தணுவில் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஆண்களின் உடலில் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரின்மையை தடுக்க வைட்டமின் டி அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன.

குழந்தை பாக்கியம் தரும்

தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. இதனால் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. எனவே விந்தணு வலு இழந்தவர்கள் காலார சூரிய ஒளியில் நடக்கலாம். சந்தோசமாய் சூரியக்குளியல் நடத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆய்வில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும், பல மடங்கு மேம்பட்டுள்ளதாக தெரிவித்தனர் ஆய்வை மேற்கொண்ட கிளார்க். 35 சதவிகித தம்பதியர் குழந்தையின்மை சிக்கல் தீர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே விந்தணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

டெஸ்டோரோன் அதிகரிப்பு

இதே கருத்தை மையமாக கொண்டு ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் சுரப்பை தூண்டுவதற்கு வைட்டமின் டி அதிக அளவில் தேவைப்படுகிறது. வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அலுவலக அறைக்குள்ளேயே அடைபட்டு கிடப்பவர்கள் எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும். இந்த ஆய்வு முடிவு டெய்லி மெயில் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Comments