இனப்படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவுதினம்

posted Aug 11, 2011, 10:02 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Aug 11, 2011, 12:00 PM ]
சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீரமுனையில் ஆலயம் மற்றும் பாடசாலை ஆகியவற்றுக்குள் வைத்து 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 21ஆண்டு நினைவுதினம் நாளை வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படுகின்றது.1990ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம், இராம கிருஸ்ண மிஷன் பாடசாலை ஆகியவற்றில் தங்கியிருந்த மக்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் படுகொலைசெய்யப்பட்டனர்.

இதனை முன்னிட்டு ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் நாளை பிற்பகல் விசேட பூசைகள் இடம்பெற்று அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் ஆலய முன்றிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் ஒளியேற்றப்பட்டு கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்படவுள்ளது.


தொலைந்துபோன தொண்ணூறு 
(இது இனவெறியர்களின் நரவேட்டையில் நம்மை விட்டுப்போன நமது உறவுகளுக்கான சமர்ப்பணம்)


சுள்ளென்று ஒரு ஞாபகம்
எனக்கு நாலு 
இரத்த வெறியர்களின் 
இன வெறியாட்டம்
அரங்கேற்ற வைபவம்
எங்களூரில்.

ஊரின் மத்தியில் இருந்த
கோயில் - அதுதான்
அவர்களின் ஆட்டமேடை
ஆர்வத்தோடு நாங்கள் போகவில்லை
அஞ்சியோடினோம் - வீட்டிலிருக்கப்
பயந்து நெருங்கினோம்.

அரங்கேற்ற நேரம் ஒதுக்கப்பட்டது
அப்பாவி உயிர்களுக்கும் கேடு
விதிக்கப்பட்டது.
அரங்கேற்றத்தின் ஆரம்பம்
அந்த வீதிகளின் மருங்கில்
எங்கள் வீட்டுச்சாமான்கள்
எங்களை நினைத்து முதலில் 
ஓலமிட்டன - வீதியில்
நைந்து புடைந்து
உடைந்தது - இது
அரங்கேற்ற வாதிகளின் 
ஆரம்ப இசை.

கைகளில் வாள் - அந்த 
நட்சத்திரம் போல் மின்னியது
இதற்காகச் சாணை பிடிக்கப்பட்டது
சிலர் கைகளில் துப்பாக்கி
நீண்ட கம்புகள்
இன்னும் என்னென்னவோ

இந்த ஒப்பனை
எந்த கூத்துக்கு - ஆம்
அந்த ஊளிக்கூத்துக்குத்தான்
இன்னும் சரியாகச் சொன்னால்
அந்த இனவெறிக் கூத்தாட்டத்துக்தான்.

தாளச் சத்தம் போல்
துப்பாக்கி வேட்டுக்கள்
வேட வேடத்தன
நாதஸ்வரம் போன்ற 
தடிகள் - எங்கள்
தலைகளில் வாசிக்கப்பட்டன. 
சல்லாரி அடித்தது போல்
இரும்பு வாள்கள் சதையைப்பிளந்து
எலும்புடன் மோதி
ரிங்! ரிங்! என்றன.

கண்ணீராலும் செந்நீராலும்
குளித்தோம் - பக்கத்தில்
இருந்தவர்களின் கையொன்று 
எனது சிறிய மடியில்
பல்லியின் வால் போல் 
பதறி துடித்தது
அழுகைக்குரல்கள்
அந்த வானையும் பிளந்தது

இறந்தவர்களின் மடியில் 
இறப்பவர்களின் சடலங்கள்
இரத்த ஆற்றில் 
இறந்த சடலங்களின்
இறுதிக் குளிப்பு
ஒற்றை குழியில் 
ஒன்றன்மேல் ஒன்றாக 
விறகு அடுக்கியது போல் 

சில நாட்களாக இடம்பெற்றது
இந்தக் காட்சி
எந்தத் திரையிலும்
படமாக்கப்படவில்லை
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்
ஒரு பேருந்து இரைந்தது
சொந்த மண்ணை விட்டு

திரை மூடப்படுகின்றது - ஆம்
திரைக்குள்ளேதான் எல்லாம்                           
                                                                           ஆக்கம் 
"இறந்த உறவுகளின் 
  உரிமைக் குரல்"