பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய பாலில் புழுக்கள் -பால் வழங்கல் நடவடிக்கை இடைநிறுத்தம்

posted Sep 15, 2014, 5:15 AM by Veeramunai Com   [ updated Sep 18, 2014, 7:23 PM ]
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் இன்று தொடக்கம் பால் வழங்கும் திட்டம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை காலை மாணவர்களுக்கு வழங்குவதற்கு என கொண்டுசெல்லப்பட்ட பால் பாவனைக்கு உதவாத வகையிலும் சிலவற்றில் புழுக்களும் காணப்பட்டது தொடர்பில் வலயக்கல்விப்பணிப்பாளரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் தெரியவருவதாவது,

பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் வழங்கப்பட்டுவந்த நிலையில் அவை நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக பால் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.இதன் கீழ் கடந்த இரண்டு வாரமாக பால் வழங்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த நடைமுறை தொடர்பில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவருகின்றன.

ஒரு குறித்த பால் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுவரும் இந்த பாலின் தரம் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இந்த நிலையில் இன்று வீரமுனை வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு வழங்குவதற்கு என 16 பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டிகளை உடைத்தபோது பெட்டிகளில் அடுக்கப்பட்டிருந்த பால் பக்கற்றுகள் ஊதிய நிலையில் காணப்பட்டதாகவும் இதனைத்தொடர்ந்து பால் பக்கட்டினை உடைத்துபார்த்தபோது துர்நாற்றம் வீசியதாகவும் சில பக்கற்றுகளில் புழுக்கல் இருந்ததாகவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் கல்வித்திணைக்களத்துக்கு அறிவித்தாகவும் இதனைத்தொடர்ந்து அங்கு வந்த பொதுச்சுகாதார பரிசோதகர் பாலினை ஆய்வுக்குட்படுத்தியதுடன் பால் பக்கட் வந்த பெட்டுகளை சீல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.நஜீமிடம் கேட்டபோது,

இது தொடர்பில் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.உடனடியாக அங்கு பொதுச்சுகாதார பரிசோதகர்களை அனுப்பி சோதனைக்குட்படுத்த பணித்தேன். சில தினங்களாக இவ்வாறான நிகழ்வுகள் ஏனைய பகுதிகளில் நடைபெறுவதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாடசாலை அதிபர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவுறுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த பால் பக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கல்விச்சேவைகள் அமைச்சு மூலமே இந்த பால் பக்கட்டுகள் வழங்கப்படுகின்றன. பால் பக்கட்டுகள் தொடர்பில் சோதனைகளை மேற்கொள்ளத்தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டதன் காரணமாகவே நாங்கள் பால் பக்கட்டுகளை சோதனைக்குட்படுத்தவில்லையெனவும் தெரிவித்தார்.