நேற்று (11/01/2010) முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக வீரமுனைப் பிரதேசத்தில் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 55 ஆண்டுகளில் ஏற்படாத பாரிய வெள்ளப்பெருக்காக இது கருதப்படுகிறது. கடந்த 1956ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் மூலம் வீரமுனை பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் பின்னர் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்காக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாகவே பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ் வெள்ளப்பெருக்கு காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 5அடிக்கு மேலாக வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதனால் அதிகளவான மக்கள் தற்காலிக முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். வீரமுனை இராம கிருஷ்ண மிசன் பாடசாலையில் சுமார் 4 அடிக்கு வெள்ளநீர் உட்புகுந்ததன் காரணமாக அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுள்ளனர். வீரமுனைப் பிரதேசத்தில் கரையோரப் பிரதேசமே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளும் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. வேளாமை செய்கையும் முற்றாக பாதிப்படைந்துள்ளது.வேளாமை கதிர் பருவம் ஆகையால் பாரியளவு நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படுமென விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இவ் அடை மழையினால் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்படுள்ளமையின் காரணமாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகளை வழங்குவதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கிராம நிலதாரிகள் தெரிவித்துள்ளனர். வளத்தாப்பிட்டி வில்லுக்குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட திடிரென ஏற்பட்ட உடைப்புக் காரணமாக வீரமுனை பிரதேசத்தின் அண்டிய கிராமங்களான மல்லவத்தை, மல்லிகைத்தீவு, சொறிக்கல்முனை ஆகிய பிரதேசங்கள் பாதிக்கப்பட்டது. மல்லிகைத்தீவு கிராம மக்கள் கடற்படையின் உதவியுடன் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.மேலும் இன்று முழுவதும் இடைவிடாது மழை பெய்து வருகின்றது. இதனால் நிலைமை மேலும் மோசமடையலாமென அஞ்சப்படுகிறது. |
நிகழ்வுகள் >