சுவிஸ் உதயம் கிழக்கின் “மாணவர் ஊக்குவிப்பு விழா-2011”

posted Mar 21, 2011, 7:48 AM by Unknown user   [ updated Mar 22, 2011, 10:53 PM by Sathiyaraj Thambiaiyah ]
அம்பாறை மாவட்டத்தில் கல்வி கற்க கூடிய திறமை இருந்தும் மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான “மாணவர் ஊக்குவிப்பு விழா-2011”இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் இடம்பெற்றது.இன்று பிற்பகல் 2.00மணியளவில் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வை “சுவிஸ் உதயம் கிழக்கு” என்னும் அமைப்பு நடாத்தியது.அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியூ,கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் க.லவநாதன் ,மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் திறமையான மாணவர்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் தெரிசெய்யப்பட்டு அவர்களுக்கு பணம் இடப்பட்ட வங்கிப்புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் சமூகத்துக்கு சிறப்பான சேவையாற்றிவரும் சமூகசேவையாளர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.சுவிஸில் வாழும் புலம்பெயர் மக்கள் தமது பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இந்த அமைப்பு ஊடாக பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் வீரமுனையை சேர்ந்த நான்கு மாணவர்கள் இந்நிகழ்வுக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.