சனிப் பெயர்ச்சி பலன்கள் 2.11.2014 முதல் 25.10.2017 வரை

posted Oct 30, 2014, 8:48 PM by Sathiyaraj Thambiaiyah
மேஷம்

அதிகாரத்திற்குத் தலை வணங்காதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காகப் பல சங்கடங் களைத் தந்த சனி பகவான் 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 8-ம் வீட்டில் அட்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார். எனவே நீங்கள் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களை அனுமதிக்காதீர்கள்.

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்துப் பேசி சிக்கிக்கொள்ள வேண்டாமே. கணவன்-மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன விவாதங்களையெல்லாம் பேசித் தீர்க்கப்பாருங்கள். உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்காதீர்கள். எதிர்மறை எண்ணங்களால் மனஇறுக்கம் உண்டாகும். பயணங்களின் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். முறையான பட்டா இல்லாத இடத்தை வாங்க வேண்டாம்.

மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். நெஞ்சு வலி, தலைசுற்றல் வந்துபோகும்.

முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். கொழுப்புச் சத்து மற்றும் கார உணவுகளைக் குறைப்பது நல்லது. சனி பகவான் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்திரமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசிச் சிக்கிக்கொள்ளாதீர்கள். செலவினங்கள் அதிகமாகும். சனி பகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் யாரும் உங்களை சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லையே என அவ்வப்போது உங்களுக்குள்ளே ஆதங்கப்பட்டுக்கொள்வீர்கள்.

பூர்வீக சொத்துப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்ததையும் உட்கொள்ள வேண்டாம். சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், செலவுகள், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். பிறமொழிக்காரர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உங்கள் பெயரில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும்.

வேலையாள், பங்குதாரர்கள் முரண்டுபிடிப்பார்கள். உணவு, கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டிவரும். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். சிலர் உங்கள் மீது பொய் வழக்குப் போடுவார்கள். புது வாய்ப்புகளும், எதிர்பார்த்த சலுகைகளும் சற்றுத் தாமதமாகி கிடைக்கும்.

இந்த சனி மாற்றம் சின்னச் சின்ன இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்தாலும் அனுபவ அறிவால் முன்னேற்றம் தருவதாக அமையும்.ரிஷபம்

எவ்வளவு பேரம் பேசினாலும் கொள்கை குறிக்கோளை விட்டு விலகாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து சகல யோகங்களையும் தந்த சனி பகவான் 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 7-வது வீட்டில் அமர்ந்து கண்டகச் சனியாக வருகிறாரே என்று அச்சப்படாதீர்கள். சனி பகவான் உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் உங்களுக்கு ஓரளவு நிம்மதியையே தருவார்.

என்றாலும் இனி இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப்பாருங்கள். என்றாலும் களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் திருமணம் தாமதமாகி முடியும். ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். இருவரும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு கர்ப்பச் சிதைவு, மாதவிடாய்க் கோளாறு, மூட்டு வலி வந்து போகும்.

யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். பலர் வேலையாகும் வரை உங்களைப் பயன்படுத்திக்கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். வழக்கை நினைத்து தூக்கம் குறையும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.

உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டுக் குடும்பத்தைப் பிரிய வேண்டிவரும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும், ஏமாற்றங்களும் வந்து போகும். என்றாலும் வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

புதிதாக வாகனம் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் அலர்ஜி, யூரினரி இன்பெக் ஷன், சளித் தொந்தரவு வந்து போகும். வெளி உணவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், தாயாருடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகளும், உங்களுக்கு வீண் பழியும் வந்து போகும்.

சனி பகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகள், தந்தையாருடன் மனத்தாங்கல், அவருக்குத் தலை வலி, கை, கால் அசதி வரக்கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்தாலும் அதிகாரிகள் ஆதரிப்பார்கள்.

இந்த சனி மாற்றம் வேலைச் சுமையைத் தந்தாலும் உங்களைப் போராடி முன்னேற வைக்கும்.மிதுனம்

நெருக்கடி நேரத்திலும் நிறம் மாறாதவர்களே! இதுவரை உங்களின் புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை எதையும் முழுமையாகச் சிந்தக்கவிடாமல் தடுத்த சனி பகவான் 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களையும், யோகங்களையும் அள்ளித் தர உள்ளார். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

தன்னிச்சையாகச் சில முடிவுகளெல்லாம் எடுக்கத் தொடங்குவீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும். இனி ஆழ்ந்த உறக்கம் வரும். பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டை விட்டு சனி விலகுவதால் குழந்தை பாக்கியம் தடையின்றிக் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகளின் தனித்திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க வழி வகை செய்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு மாறும். அவர்கள் வீட்டுத் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். கோவில் விசேஷங்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். என்றாலும் அவ்வப்போது சுபச் செலவுகளும், புகழ் பெற்ற புண்ணிய ஸ்தல பயணங்களும் அதிகரிக்கும். சனி பகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் மனோபலம் கூடும்.

சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் சிறுசிறு விபத்துகள், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையெழுத்திடும் முன்பாகச் சட்ட நிபுணர்களை கலந்தலோசிப்பது நல்லது. சனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகமாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.

வியாபாரம் செழிக்கும். புகழ் பெற்ற பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் வாய்ப்பு வரும். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். எரிபொருள், செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களைக் குறைக் கூறிய அதிகாரியின் மனசு மாறும். உங்களின் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

இந்த சனிப் பெயர்ச்சி தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைப்பதுடன், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக அமையும்.கடகம்

கற்பனைத் திறமும் கலாரசனையும் உள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கத்தையும், வீண் அலைச்சலையும் தந்து உங்களை நாலாவிதத்திலும் சிக்க வைத்த சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017வரை உள்ள காலகட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் ஒரளவு நன்மையே உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்குக் குடிப்புகுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் குறையும்.

தாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வாகனப் பழுதைச் சரி செய்வீர்கள்.

சனி பகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். என்றாலும் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். அவர்கள் விரும்பும் பாடத்தில் உயர்கல்வி பெற அனுமதியுங்கள். மகளுக்கு வரன் பார்க்கும் போது விசாரித்து முடிவெடுப்பது நல்லது. உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு மகனை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கப்பாருங்கள்.

பூர்வீக சொத்துப் பிரச்சினை தலைத்தூக்கும். உறவினர்கள் விஷயத்தில் நியாயம் பேசப் போய் பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். சனி பகவான் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் மற்றவர்களை விமர்சித்துப் பேச வேண்டாம். கண் வலி, பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.

சனி பகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அடிவயிற்றில் வலி, கணுக்கால் வலி வந்து போகும். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் செல்வம், செல்வாக்குக் கூடும். புது வேலை அமையும். மூத்த சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக்கொள்வீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இரும்பு, ரசாயனம், ஸ்பெகுலேஷன் வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினை மறையும். பதவி உயர்விற்காகத் தேர்வெழுதிக் காத்திருந் தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் தேடி வரும்.

இந்த சனிப் பெயர்ச்சி உங்களை உற்சாகப்படுத்துவதுடன், புதிய திட்டங்களை நிறைவேற்றும் வல்லமையையும் தரக்கூடியதாக அமையும்.சிம்மம்

விவாதம் என வந்துவிட்டால் விடாப்பிடியாய் இருப்பவர்களே! இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தந்த சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 4-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டம் உங்களை கொஞ்சம் போராடி தான் எதையும் சாதிக்க வைக்கும். உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் வீட்டதிபதியாக சனி வருவதால் உங்கள் மனைவிக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும்.

சிலர் பூர்வீகத்தை விட்டு வேறு ஊர் அல்லது அண்டை மாநிலத்தில் குடிபுகுவீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படப்பாருங்கள். எதிலும் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தைச் சரி பார்த்து வாங்குவது நல்லது. அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு வாகன விபத்துகள் நிகழக்கூடும். மின்சாரம், கத்திரிக்கோல் போன்றவற்றைக் கவனமாகக் கையாளுங்கள்.

கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் அலட்சியம் வேண்டாம். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிச் செய்ய வேண்டாம். அவ்வப்போது சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள். சுத்திகரிக்கப்படாத தண்ணீரைக் குடிக்க வேண்டாம்.

சனி பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழல் உருவாகும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைபளு, விரும்பத்தகாத இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்து செல்லும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். விளம்பர யுக்திகளைக் கையாளுங்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள்.

பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வேற்று மதத்தினர், நாட்டினர் மூலம் ஆதாயமடைவீர்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி, துரித உணவகம் வகைகளால் லாபமடை வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகாரிகள் குறைகூறினாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்சினைகள் வந்து போகும். திடீர் இடமாற்றங்கள் வந்துப் போகும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

இந்த சனி மாற்றம் இடமாற்றங்களைத் தந்தாலும் தொடர் முயற்சியால் சாதிக்க வைப்பதாக அமையும்.கன்னி

தளராத தன்னம்பிக்கையாளர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச் சனியாக அமர்ந்து உங்களைப் பல வகையிலும் சனி பகவான் சின்னா பின்னமாக்கினரே! பணத்தட்டுப் பாட்டையும், பேச்சால் பிரச்சினைகளிலும் சிக்கவைத்து உங்களைக் கேளிக்கையாக்கிய சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 3-ம் வீட்டில் வலுவாக அமர்வதால் பணவரவு அதிகரிக்கும்.

வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தோல்வி முகம் மாறும். மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் இனி விரைந்து முடியும். தைரியம் பிறக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இதமாகவும், இங்கிதமாகவும் பேசத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும். நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று புது வேலையில் அமர்வீர்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் வந்தமையும். பூர்வீக சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். சிலர் புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.

பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விலகிச் சென்ற பழைய உறவினர், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். சனி பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

சனி பகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். தந்தையாருடன் கசப்புணர்வுகள், அவருக்கு வீண் டென்ஷன், நெஞ்சு எரிச்சல், மூச்சுத் திணறல் வந்து போகும். சனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், வீண் அலைச்சல், தூக்கமின்மை வந்து போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பாக்கிகள் வசூலாகும்.

பழைய வேலையாள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கட்டுமானப் பொருட்கள், வாகன வகைகயால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். உயரதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள்.

இந்த சனி மாற்றம் புதுத் தெம்பையும், தைரியத்தையும் தருவதுடன், எதிலும் முதலிடத்தையும் பிடிக்க வைப்பதாக அமையும்.துலாம்

தோல்வியைக் கண்டு துவளாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்ம சனியாக இருந்து உங்களை விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்றார் சனி பகவான். ஏதோ ஒன்று உங்களை அழுத்துவது போல நினைத்தீர்களே! இனி உடம்பு லேசாகும். ஒரு பிரச்சினை தீர்வதற்குள் மற்றொரு பிரச்சினையைத் தந்து உங்களை சோகத்தில் மூழ்க வைத்தாரோ! இப்படி உங்களை வாட்டி வதைத்த சனி பகவான் இப்பொழுது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாத சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.

உங்களின் பிரபல யோகாதிபதியான சனி பகவான் 2-ம் வீட்டிற்கு வந்தமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரச்சினை விலகும். அழகு, ஆரோக்யம் கூடும். எப்போதும் சோகம் படர்ந்த உங்கள் முகம் இனி பிரகாசிக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தங்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். மற்றவர்களின் மனநிலையை உணரத் தொடங்குவீர்கள். என்றாலும் பாதசனியாக வருவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் பிரச்சினையில் முடிய வாய்ப்பிருக்கிறது.

குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவு வரும். முன்கோபத்தைத் தவிர்க்கப்பாருங்கள். பார்வைக் கோளாறு, காது, கண், பல் வலி வந்து போகும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்-. உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச்சுமை இருக்கும். 8-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பாராத செலவுகள், சிறுசிறு விபத்துகள், ஒருவித படபடப்பு, பயம் வந்து நீங்கும்.

நகை, பணத்தை யாருக்கும் கடன் தரவோ, வாங்கவோ வேண்டாம். லாப வீட்டைப் பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் நட்டங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். திடீர் லாபம் உண்டு. வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. புது தொடர்புகள் கிடைக்கும். புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். கட்டுமானம், ஸ்டேஷனரி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

இந்த சனி மாற்றம் தடைகளை தகர்த்தெறிவதுடன் உங்களுக்குப் பணவரவையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.விருச்சிகம்

மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்பவர்களே! இதுவரை உங்களின் ராசிக்குப் பனிரெண்டில் அமர்ந்துகொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளைத் தந்த சனி பகவான் இப்பொழுது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜன்ம சனியாக அமர்கிறார். ஜென்ம சனி என்ன செய்யப் போகிறதோ என்றெல்லாம் அஞ்சாதீர்கள். சனி பகவான் உங்களுக்குத் திருதியாதிபதியாகவும், சுகாதிபதியாகவும் வருவதால் ஒரளவு நல்லதையே செய்வார். எடுத்த வேலைகளையெல்லாம் இனி முதல் முயற்சியிலேயே முடிப்பீர்கள்.

வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதை இனி உணருவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். ஆனால் ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்ம சனியாக வருவதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு, தலைசுற்றல், இரத்த அழுத்தம் வந்து போகும்.

பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையும் வரும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள உணவுகள் வேண்டாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சரி பார்த்துக்கொள்ளுங்கள். உடல் பருமனாவதைத் தவிர்க்க தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. தோலில் நமைச்சல், அலர்ஜி, யூரினரி இன்பெக் ஷன் வரக்கூடும். சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். தன்னைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைக் கண்டறிவதில் குழப்பம் வந்து போகும்.

இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையைத் தவிர்க்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. சனி பகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அவ்வப்போது வரும் தோல்வி மனப்பான்மையைத் தவிர்க்கப்பாருங்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும்.

7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு முதுகு, மூட்டு, கழுத்து வலி வந்து போகும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உத்தி யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டிவரும். பணிகளைச் சற்றுப் போராடி முடிக்க வேண்டிவரும். சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகும்.

இந்த சனி மாற்றம் ஒருவித மனப் போராட்டங்களுக்கிடையே மகிழ்ச்சியையும், வெற்றியையும் தருவதாக இருக்கும்.


தனுசு

தன் சொந்த முயற்சியால் முன்னேறுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுக்குப் பணவரவை தந்து, உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருப்பதால் எதிலும் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

சனி பகவான் உங்களுக்கு 2-ம் வீடு மற்றும் 3-ம் வீட்டதிபதியாக வருவதால் ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். ராசிக்கு 12-ல் சனி மறைவதால் உங்களுடைய பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படப்பாருங்கள். சிலர் உங்களைத் தவறான பாதைக்கு வழி காட்டக் கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். நீண்ட நெடுங்காலமாகத் தள்ளிப் போன வேலைகளையெல்லாம் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். ஆனால் கொஞ்சம் சிக்கனமாக இருக்கப்பாருங்கள். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.

நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் நீங்கள் பெருமையாகப் பேசப்படுவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்காதீர்கள். மனைவியைப் பிள்ளைகள் முன்னிலையில் குறைக்கூற வேண்டாம். சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். முக்கியக் காரியங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பழைய கடன் பிரச்சினையால் சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்து போகும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். சனி பகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் மற்றொரு பக்கம் செலவினங்களும் இருந்து கொண்டேயிருக்கம். குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

வீண் செலவுகள், தந்தைக்கு ஆரோக்யக் குறைவு, அவருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரத்தில் மக்கள் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்யப்பாருங்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உயரதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

இந்த சனி மாற்றம் உங்களுக்கு ஏழரைச் சனியின் தொடக்கமாக இருந்தாலும் ஓரளவு நிம்மதியையும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்து தருவதாகவும் அமையும்.மகரம்

புதுமையைப் புகுத்துபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை ஒரு வேலையையும் முழுமையாகப் பார்க்க விடாமல் தடுத்ததுடன், உத்யோகத்தில் மரியாதைக் குறைவான சம்பவங்களையும் தந்த உங்கள் ராசிநாதன் சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி தொட்ட காரியங்கள் துலங்கும். மற்றவர்களால் முடியாத செயற்கரிய காரியங்களையும் சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். திடீர் பணவரவு, யோகம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். கணவன் - மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும்.

வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள் கூடி வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலர் பூர்வீக சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப விரிவுபடுத்துவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். பழுதான மின்னணு, மின்சாரச் சாதனங்களை மாற்றிப் புதுசு வாங்குவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையின்றிக் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் தலைசுற்றல், லேசாக மயக்கம், டென்ஷன், அலர்ஜி வந்து நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பார்கள்.

இந்த சனி மாற்றம் செல்வம், செல்வாக்குள்ள அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும்.கும்பம்

ரசிப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருந்த சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் புதிய பாதை தென்படும். திடீர் யோகம் உண்டாகும். உங்களுடைய திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். தந்தையார் குணமடைவார். அவருடன் இருந்துவந்த மோதல்கள் விலகும். வருமானம் உயரும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து, பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் தீரும். மழலை பாக்கியம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வீட்டில் கூடுதல் தளம் அமைப்பது அல்லது கூடுதல் அறை கட்டுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். சகோதரங்களால் உதவிகள் உண்டு. ஓதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். அவசரத்திற்குக் கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருக்கு நெஞ்சு வலி, இரத்த அழுத்தம், இடுப்பு வலி வந்து போகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவியுடன் வாக்குவாதம், அவருக்கு ஃபைப்ராய்டு, தைராய்டு பிரச்சினைகள் வரக்கூடும். ஆனால் வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும்.

சனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் தேடி வரும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளைத் தவிர்க்கவும். முக்கியப் பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். திடீர் இடமாற்றம் உண்டு.

இந்த சனி மாற்றம் உங்கள் ஆழ்மனதில் இருந்த திறமைகளை வெளிக் கொணர்வதுடன் ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.மீனம்

சரித்திரத்தில் இடம்பிடிக்க விரும்புபவர்களே! இதுவரை அஷ்டமத்தில் நின்றுகொண்டு உங்களைப் படாதபாடு படுத்தி, விரக்தியில் மூழ்க வைத்த சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள கால கட்டங்களில் 9-ம் வீட்டில் அமர்வதால் இருள் சூழ்ந்த உங்கள் வாழ்க்கை இனி பிரகாசிக்கத் தொடங்கும். சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை உண்டாகும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பழைய பிரச்சினைகள், சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இனி இருவரும் மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.

தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்தீர்களே! நல்ல விதத்தில் முடியும். வெளிவட்டாரம், சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்சினை தீரும். ஆனால் தந்தையாருடன் மன வருத்தம் வரும். தந்தையாருக்குச் சிறுசிறு அறுவை சிகிச்சை, மூச்சுப் பிடிப்பு, எலும்புத் தேய்மானம் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும் நீடிக்கும்.

சனி பகவான் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சனி பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். என்றாலும் பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வழக்கில் தீர்ப்பு சற்று தாமதமாகும். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் தடைகளெல்லாம் நீங்கும். புதுப் பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். இழப்புகளைச் சரி செய்வீர்கள். `

அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வருவார். தேங்கிக் கிடந்த பணிகளை சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் விரைந்து முடிப்பீர்கள். அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தாமதமின்றி இனி கிடைக்கும். வேறு நல்ல வாய்ப்புகளும் வரும்.

இந்த சனி மாற்றம் மங்கியிருந்த உங்களைப் பளிச்சிட வைத்து, பணவரவையும் தரும்.


Comments