ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தேர் உற்சவமும் - சீர்பாத குலத்தின் வரலாறும்

posted Jul 13, 2013, 7:50 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 13, 2013, 7:57 PM ]
வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (13/07/2013) சனிக்கிழமை பிற்பகல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் இந்த ஆலயத்தின் வரலாறை நாங்கள் தொட்டுச்செல்வது சாலச்சிறந்தது என கருதலாம். தற்போதைய நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பு குறைந்துவரும் நிலையில் ஆலயங்களின் வரலாறுகள் தமிழர்களின் இருப்பை பரைசாற்றி நிற்கின்றன. அந்த வகையில் வீரமுனையின் வரலாறானது நீண்ட காலத்தினையும் தமிழர்களின் வடக்கு கிழக்கு தொடர்புகளையும் தொட்டுச்செல்கின்றது.இங்கு சீர்பாதம் என்னும் குலத்தோன்றல்கள் அதிகமாகவுள்ளதே வீரமுனைக்கிராமமாகவுள்ளது.

சீர்பாததேவியின் வழித் தோன்றல்களான இம்மக்கள் "சீர்பாதகுலம்" என்று அழைக்கப்படுகின்றனர். கதிரமலையை(கண்டியை) தலைநகரமாக கொண்டு ஆட்சிசெய்த இராஜசிங்கனின் மகன் வாலசிங்க மன்னன் சோழ நாடு சென்று சோழநாட்டு நாட்டு இளவரசி சீர்பாததேவியை மணந்தான். பின்னர் தனது ஆட்சிமைக்குட்பட்ட பிரதேசத்தை தனது மனைவிக்கு காட்டும்பொருட்டு கடல் வழியாக கப்பலில் இலங்கைக்கு செல்ல ஆயத்தமானார். இளவரசியின் தந்தையார் தனது மகளுக்கு துணையாக தனது உறவினர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார். கப்பலானது கடல்வழியாக இலங்கை நோக்கிவருகையில் திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரத்தின் முன்பாக கப்பல் எத்திக்கும் நகராமல் நிற்கவே, இதற்கான காரணத்தை கண்டறிய கப்பலில் வந்தோரில் சிலர் கடலில் தேடியபோது ஒரு விநாயகர் சிலை தடுத்து நிறுத்தியமை கண்டு சீர்பாததேவியும் ஏனையோரும் அதிசயித்தனர்.


விநாயகரை மேலே கொண்டுவரப் பணித்த சீர்பாததேவி, கப்பல் தங்குதடையின்றி சென்று எங்கு கரை சேருகின்றதோ அங்கு ஆலையம் அமைப்பேன் என வேண்டினார். இளவரசியின் வேண்டுதலையடுத்து ஓடிய கப்பல் மட்டக்களப்பு வாவியினூடாக சென்று வீரமுனையில் கரைதட்டி நின்றது. கீழே இறங்கிய சீர்பாததேவி தன்னுடன் வந்த மக்களைக் கொண்டு வீரமுனையில் விநாயகருக்கு கோயில் அமைத்தாள். இவ்வாலயத் திருப்பணிக்கு உதவுமாறு அயலில் உள்ள மக்களுக்கு வாலசிங்க மன்னன் உத்தரவிட்டான்.

கடல் வழியாக யாத்திரை மேற்கொண்டதன் காரணமாக ‘சிந்து யாத்திரை’பிள்ளையார் என பெயர் சூட்டினார். (சிந்து என்றால் கடல்) அது பிற்காலத்தில் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் என அழைக்கப்படலாயிற்று. அத்தோடு இவ்வாலயத்துக்கு சின்னமாக அரவிந்த மலர்.செங்கோல்,கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினையும், சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயமானது எதிர்காலத்தில் சிறப்புற்று விளங்கும் பொருட்டு வயல் நிலங்களையும் வழங்கி மானியமாக சாசனம் செய்து அதனைச் செப்பேட்டில் பொறித்து ஆலயத்தில் சேமிக்கச் செய்தான் வாலசிங்க மன்னன். அத்துடன் இம் மக்கள் சாதி,குல வேறுபாடுகளின்றி அரசியின் பெயரைக் கொண்டு “சீர்பாதகுலம்”என வகுத்தான் மன்னன் வாலசிங்கன்.


அம்பாறை மாவட்டத்தின் பாரம்பரிய கிராமங்களில் ஒன்றாக வீரமுனை கிராமம் உள்ளதுடன் உலகின் அனைத்து பாகங்களிலும் சீர்பாத மக்கள் வாழ்ந்துவருகின்றமை சிறப்பம்சமாகும். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரமுனை முற்றாக எரிக்கப்பட்டு அந்த மக்கள் துரத்தியடிக்கப்பட்டு ஆலயம் சேதமாக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் 1994ஆம் ஆண்டு வீரமுனை மக்கள் விநாயகப் பெருமானின் அருளால் வந்து குடியேறியதுடன் குடியேறிய அன்று இரவு ஒளிப்பிழம்பாக விநாயகப்பெருமான் ஆலயத்துக்குள் வந்திறங்கியதை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் படையினர் கண்டு விரைவில் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்பட்டது.

இவ்வாறு அற்புதங்கள் நிறைந்ததும் வரலாற்று பொக்கிசமாகவும் உள்ள வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது. 10 தினங்களைக்கொண்ட ஆலய வருடாந்த உற்சவத்தில் தினமும் சுவாமி உள்வீதி வெளிவீதியுலா இடம்பெற்றுவருவதுடன் தம்ப பூசை மற்றும் வசந்த மண்டப பூசை என்பன இடம்பெற்றுவருகின்றது.

விசேடமாக இம்முறை ஆலயத்தில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.முதன்முறையாக இந்த தெற்ப திருவிழா நடத்தப்பட்டுள்ளது.இந்த உற்சவத்தின் சிறப்பம்சமாக ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது. இந்த தேர் உற்சவத்தில் உலகின் பல பாகங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான சீர்பாத மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


        Photos By: Santhiramohan Sanjeev