திருக்கார்த்திகை விளக்கீடு

posted Nov 28, 2012, 7:56 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 28, 2012, 7:57 AM ]
இன்று (28.11.2012) கார்த்திகை விளக்கீடு  ஆகும்.இந்துக்கள் தமது வீடு, ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.  கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும். கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் திருவிளக்கேற்றி வழிபடுவதனால் கார்த்திகை தீபம் எனப் பெயர் பெற்றது. கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றது.


அடி முடி காணமுடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிர்க்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது.படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தைத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. அவ் ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவங் கொண்டு சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராஹ் அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார். அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். . அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்டிச்சியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும். 

PicasaWeb Slideshow

வீரமுனை பிரதேசத்திலும் கார்த்திகை தீப வழிபாட்டை இந்துக்கள் தமது இல்லங்களில்  தீபம் ஏற்றி வழிபட்டனர். வீரமுனைசிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூஜை இடம்பெற்றதுடன் சொர்க்கபானையும் எரிக்கப்பட்டது. 

                      Photos by: Krishanapillai Sutharsan