சக்திரூபமான பார்வதிதேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும் அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். இவ்விரதத்தை மேற்கொண்டு கௌதம முனிவரின் வழிகாட்டலில் சிவபெருமானது இடது பாகத்தை உமாதேவியார் பெற்றார். திருக்கேதாரத்தில் கேதாரேஸ்வரை கௌரியம்மை பூஜித்துப் பேறு பெற்றமையால் இவ்விரதம் "கேதாரகௌரி விரதம்" எனப் பெயர் பெற்றது. இவ்விரதம் சிவவிரதங்களுள் முக்கியமான ஒன்றாகும். ஆண்டுதோறும் (புரட்டாதி) மாதம் சுக்லபட்ஷ தசமியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்து அன்று முதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும் கும்பத்திலும் பூஜித்து இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தீபம் காட்டியயும் பூஜை செய்தும் கேதாரேஸ்வரனை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரத்தை கடைப்பிடிக்கலாம். தம்பதிகள் சந்தோஷமாக இருத்தலும், பிணிநீங்கலும், வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும், கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் இவ்விரதம் உகந்தது. கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும். கேதார கௌரி விரத இறுதிநாளான இன்று (23/10/2014) வியாழக்கிழமை வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளில் விரதம் நோற்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கு.நிமலேஸ்வரக் குருக்களின் தலைமையில் கௌரி விரத இறுதிநாள் வழிபாடுகள் இடம்பெற்றன. |
நிகழ்வுகள் >