இன்று சந்திரகிரகணம்; இலங்கையில் முழுமையாக காண வாய்ப்பு

posted Dec 10, 2011, 9:43 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 10, 2011, 9:44 AM ]
இவ்வாண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று மாலை 6.16 முதல் இரவு 9.48 மணிவரையான காலப்பகுதியில் நிகழவுள்ளது.

இருப்பினும் இந்த சந்திர கிரகணம் இன்று இரவு 11 மணிக்கே முழுமையாக நிறைவடையும்.

இன்றைய சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருக்கும் என ஆத்தர் சி.கிளார்க் மத்திய நிலையம் குறிப்பிட்டது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி குறுக்கிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. இதன்போது சூரியனின் நிழல் பூமியை ஊடறுத்து சந்திரனில் படியும் போது சந்திரனின் நிறத்தில் மாற்றம் ஏற்படும் என வானியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. 

இதன்படி பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்து 51 நிமிடங்கள் நீடிக்கவுள்ளது. இவ்வாறு இலங்கை நேரப்படி இன்று இரவு 7.36 மணி முதல் 8.27 மணிவரை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது. மொத்தமாக இந்த சந்திர கிரகணம் 3 மணி 52 நிமிடம் 17 வினாடிகள் நீடிக்கவுள்ளதாக ஆத்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்தது. 

இன்று நிகழவுள்ளது இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரணமாகும். இதற்கு முன்னர் கடந்த ஜூன் 10ஆம் திகதி சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு சந்திர கிரகணம் இரண்டு ஆண்டுகள் கழித்தே நிகழவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதியிலேயே மீண்டுமொரு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. எனினும் அந்த சந்திரகிரகணத்தை இலங்கையில் முழுமையாக காண முடியாது என வானியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இன்றைய தினத்தை தவிர்த்து இலங்கை மீண்டும் முழுமையான சந்திரகிரகணத்தை காண்பதற்கு 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதாவது வரும் 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி நிகழவுள்ள சந்திர கிரகணத்தையே இலங்கையால் முழுமையாகக் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் சந்திர கிரகணம் தொடங்கி, முடியும் வரை, முழுவதையும் பார்க்கலாம். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இதன் ஆரம்பநிலையை காண முடியாது. சந்திர கிரணகத்தின் அனைத்துக் கோணங்களையும் பார்க்கும் வகையில் இலங்கை அமைந்தள்ளது எனவே வெறும் கண்களால் இந்த கிரகணத்தை கண்டு ரசிக்கலாம்.