மட்டக்களப்பு வாழ் வீரமுனை மக்கள் ஒன்றியம் உதயம்

posted Jan 20, 2015, 5:55 PM by Veeramunai Com   [ updated Jan 20, 2015, 5:55 PM ]
மட்டக்களப்பில் உள்ள வீரமுனையினை சேர்ந்தவர்களை ஒன்றிணைத்த மட்டக்களப்பு வாழ் வீரமுனை மக்கள் ஒன்றியம் என்னும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீரமுனைக்கிராமத்துடனான தொடர்பினையும் சமூக மற்றும் கல்வி சேவையினையும் அடிப்படையாக கொண்டு இந்த ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமைவாய்ந்த கிராமமாகவும் பிரசித்திபெற்ற கிராமமாகவும் உள்ள அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பினை வசிப்பிடமாக கொண்டுவர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர். இதன் அங்குரார்ப்பணகூட்டம் இன்று மாலை மட்டக்களப்பு, கூழாவடியில் நடைபெற்றது. இதன்போது 11பேர் கொண்ட நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டதுடன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. தலைவராக மு.விநாயகமூர்த்தியும் செயலாளராக ச.தெய்வேந்திரனும் பொருளாளராக ஜோ.செந்தில்நாதனும் உப தலைவராக த.அழகையாவும் உப செயலாளராக த.மணிவண்ணனும் தெரிவுசெய்யப்பட்டனர்.நிர்வாக சபை உறுப்பினர்களாக எஸ்.சந்திரமோகன், கி.வரதராஜன், எஸ்.நவநீதகுமாரன், வா.ரமேஸ்குமார், எஸ்.வாமதேவன், எஸ்.ராஜ்குமார், மா.புத்திசிகாமணி, வை.கணேசமூர்த்தி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன் கணக்காய்வாளராக எம்.கருணாகரன் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது தலைவராக தெரிவுசெய்யப்பட்ட மு.விநாயகமூர்த்தி உரையாற்றும்போது,
எதனைச்செய்வது என்றாலும் ஒன்றிணைந்த ஒரு அமைப்பு தேவை.அனைவரையும் இணைத்து சேவையாற்ற இந்த அமைப்பு பெரும் உதவியாக இருக்கும்.நாங்கள் 1990ஆம் ஆண்டு வீரமுனையில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பலர் இந்த மட்டக்களப்பு நகரில் வாழ்கின்றனர்.அவர்களை நாங்கள் ஒன்றிணைக்கவேண்டும். 1990ஆம் ஆண்டு வீரமுனையில் இடம்பெற்ற சம்பவங்களே எங்களை அங்கிருந்துவெளியேற்றின.அந்த சம்பவங்களை நாங்கள் நினைவுகூரவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். கிராமங்களுக்குள் இருப்பவர்களை விட வெளியில் இருப்பவர்களுக்கு வெளி அனுபவம் அதிகம்.அந்த அனுபவங்களை பயன்படுத்தி எமது மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்யவேண்டும் என்றார்.