தைப்பொங்கல் தின நிகழ்வுகள்

posted Jan 14, 2014, 7:04 PM by Veeramunai Com   [ updated Jan 14, 2014, 7:11 PM ]
இந்துக்களின் வாழ்வில் இறையின் அடையாளமாக ஞாயிற்றைப் போற்றுகின்றனர். எனவே இறை வழிபாடும், இயற்கை வழிபாடும் ஒன்றிணைந்து தைப்பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடப்பெற்று வருகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் (சூரியன், மழை) மற்ற உயிர்களுக்கும் (கால் நடை) நன்றி சொல்லும் ஒரு நன்றியறிதலான விழாவாக கொண்டாடப்படும் இத் தைப்பொங்கல் விழா சமயங்கள் கடந்து பொதுவாக அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.


தமிழர் தம் வாழ்வில் கலாசார பண்பாடுகள் மேலோங்கி நிற்பதற்கு அவர்களின் தனித்துவமான பண்பாட்டுக் கோலங்களே மூல காரணமாகும். அன்றுதொட்டு இன்றுவரை தமிழர்கள் எதையும் தங்கள் கலாசார மேம்பாடு மேன்மையுறும் வகையில் வாழ்ந்து காட்டி வந்துள்ளனர். அறுபத்து நான்கு கலைகளிலும் ஏக போக உரிமை கொண்டாடியவர்கள் சோதிடம், வைத்தியம்போன்ற துறைகளில் இவர்களை மிஞ்சியவர்கள் யாரும் இலர் எனலாம்.


தைப்பொங்கல் நாளானது சூரிய பகவானின் கருணை வேண்டி அவருக்கு பொங்கலிட்டு படைத்து வழிபடும் நாளாகவும், தேவர்களுக்கு இராப் பொழுது கழிந்து பகல் பொழுதின் ஆரம்பமான உத்தராயண காலத்தை வரவேற்று அதற்கு பொங்கலிடும் நாளாகவும், உழவர்களின் திருநாளாகவும் தைப்பொங்கல் திருநாள் காட்சியளிக்கின்றது .கதிரறுத்து புதிரெடுத்து புதுப்பானை கொண்டு புது நெல்லில் குற்றிய அரிசையை பொங்கி படைத்து கதிரவனுக்கு காணிக்கையாக்கி வழிபாடு செய்யும் இனிய திருநாள் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இத்தகைய தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வீரமுனையில் உள்ள ஆலயங்களில் சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்தது விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.