திருவெம்பாவை தீர்த்தோற்சவ நிகழ்வு

posted Jan 5, 2015, 7:01 PM by Veeramunai Com   [ updated Jan 5, 2015, 7:14 PM by Sathiyaraj Thambiaiyah ]
மார்கழி மாதத்தின் பெருமையை எடுத்தியம்பும் திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை (நட்சத்திரம்) அன்று  நிறைவு செய்வார்கள். இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோயில் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர்.

அந்தவகையில் எமது அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை விரதமானது கடந்த 2014.12.27ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி நேற்று (05.01.2015) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது. நேற்று காலை சுவாமியின் திருவீதியுலா இடம்பெற்று தீர்த்தத்கேணியை வந்தடைந்தது. வரும் வழிதோறும்  பக்த அடியார்கள் தங்கள் வாசலில் நிறைகுடங்களை வைத்து பெருமானை வழிபட்டனர். தொடந்து கிரிகைகள் இடம்பெற்றதோடு அதனைத் தொடர்ந்து மு.ப 10 மணி சுப முகூர்த்த வேளையில் எம்பெருமான் தீர்த்தமாடியதுடன் ஆலயத்தில் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்வு இடம்பெற்றதோடு திருவாதிரை உற்சவம் இனிதே நிறைவு பெற்றது.