வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி, வெருகம்பல் மலைப்பகுதியில் புராதன காலத்தில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் உலோகத்தாலான 2 அடி உயரமான அம்மன் சிலையையும் மலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களையும் பிரதேசவாசிகள் 25/07/2010 அன்று கண்டுபிடித்துள்ளனர். கதிரவெளி வைத்தியசாலைக்கு அருகில் செல்லும் இரண்டரை கிலோமீற்றர் தூரம்கொண்ட வெருகம்பல் வீதியின் முடிவில் உள்ள குரங்கு மாலையிட்ட அல்லது குரங்கு கொடிபோட்ட மலை எனும் பகுதியிலேயே இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாகரை அண்டிய பகுதிகளில் இயக்கர் நாகர் வாழ்ந்தாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் வட்டவடிவான ஒரு கல்லும் அதைச் சுற்றி கற்களால் அமைக்கப்பட்ட கதிரைகளும் காணப்பட்டன. அவ்வழியால் செல்லும் மக்கள் அங்கு வழிபாடு நடத்திவிட்டுச் செல்வது வழக்கம். மதிப்பு மிக்க பல பொருட்கள் இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில் இன்று ஞாயிறு காலை வேலையின் நிமித்தம் அப்பகுதிக்குச் சென்ற கனகராஜா, குமார் ஆகிய இரு பிரதேசவாசிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, மலையிலுள்ள குகையொன்றிலிருந்து வித்தியாசமான ஒளிக்கீற்றுகள் தென்பட்டதை அவதானித்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது உலோகத்தாலான 2 அடி உயரமான அம்மன் சிலையும் அதனை அண்டிய மலைப்பகுதியில் சில எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதையும் அவதானித்துள்ளனர். அவர்கள் இவ்விடயம் குறித்து அப்பிரதேச மக்களுக்குத் தெரிவித்ததையடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அப்பகுதிக்கு வந்தனர். தகவல்: வாலசிங்கம் கிரிஷ்ணகுமார் |
நிகழ்வுகள் >