உள்ளத்தின் உறுதியிலே உருக்குக்கு ஒப்பாவாள் கள்ளமிலாச் சிந்தையிலே கனகத்தின் நிகராவாள் அள்ளிக் கொள்வன்ன அவளுடைய திருஉருவோ வெள்ளியிலே செய்திட்ட குத்து விளக்கேயாம். வெண்கலக் குரலெடுத்து வெண்மதி நீ பாடுகையில் மண்ணிலுள்ள உயிரினங்கள் மதிமயங்கிக் கேட்டிடுமே! புண்பட்ட நெஞ்சிற்கோர் புதுமருந்தாய் வந்தவளே! கண்கவரும் பித்தளையோ கண்மணியே மேனிநிறம்! இரும்புபோல் ஊருக்கு உதவுகின்ற உன்னிடத்தில் அரும்புகின்ற காதலினால் அஞ்சுகமே கேட்டிடுவேன் விரும்புகிறேன் உன்னைநான் விரிமலரே என்னை நீ துரும்பென்று எண்ணாமல் தூயவனை ஏற்றிடுவாய். பூமியிலே வந்துதித்த புதுமலரே கோவிலுள்ள சாமிகளும் கண்சிமிட்டும் பேரழகே! இப்புவியில் தாமிரத்தின் சேர்க்கையினால் ஜொலிக்கின்ற தங்கம்போல் தூமணியே என்னைஉன் துணைவனாய்க் கொண்டிடுவாய்! |
கவிதைகள் >