கவிஞனாகிப் பார் தோழா!

posted Dec 9, 2011, 9:30 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 9, 2011, 9:34 AM ]

கவிஞனாகிப் பார்
உன்னுள்
கதிர்கள் முளைக்கும் 
புவியும் ஒளிரும் பார்
அதனால்
புலன்கள் விழிக்கும் 

மூளையால் பார்
கண்ணால் பார்
இதயத்தால் பார் 
இன்னும் 
அத்தனைப் புலன்களாலும் பார்

உச்சியில் கருக்கொண்டதை
உடலின்
அத்தனைச் செல்களுக்கும்
நரம்புகளில் அனுப்பி
அனுபவம் பெறு

வர்மப்புள்ளிகள்
ஞானேந்திரியங்கள்
கர்மேந்திரியங்கள்
உன்னுள் இருக்கும்
அத்தனைப் பொறிகளும்
ஒளிபெற்றிட

சின்னக் கலத்தின் நுனியில்
சிந்தனைகள் பாயட்டும்

எங்கு தொடங்கும் 
எங்கு பரவும் 
உணர்வு 
எங்கு குவிந்து
எங்கு எரியும்

வேடிக்கை மனிதர்கள்
வண்ணமிழக்க
நரம்புகளின் சுருதியில்
கரங்கள்
வண்ணமிழைக்கும்

மொட்டு மலரும்
சிற்றோசையிலும்
சில்லெனப் பரவும் வாச வீச்சுக்ளிலும்
பட்டின் மெனமையிலும்
வண்ண வெடிப்புகளிலும்
உன்னுள் விழும் ஒருபொறி

உனக்குள் பரவி
உணர்வுகளை ஒளியேற்றி
ஒளிச்சிதறல்களை
உன்னுள் கருவாகி
ஒளிரும் சிந்தனையில்
ஒளிரும் மானுடம்
உன்னுள் 
கவிபிறக்கின்ற வினாடி!   

Comments