இருட்டான வயதில் வெளிச்சமாய் வந்து சென்றவளே! உன் பூவிரல் பிடித்து எழுந்து நின்றவன் எழுதும் கடிதம்..... உன்னை முதல் முறையாக உன் வீட்டு முற்றத்தில் மூங்கில் நாற்காலியில் பூத்த தாமரைப்பூவாக பார்த்தேன் பார்த்த நொடியிலேயே நீதான் எனக்கு எல்லாமென என்னை கொடுத்தேன் ![]() உன் முகதரிசனம் பெரும் மாலை வேளைக்காக நாள் முழுவதும் கடிகாரத்தின் அடியில் தவம் கிடந்திருக்கிறேன் நொடிமுள் ஓசையை என் இதயத்துடிப்பு வென்றிருக்கிறது உன் வீட்டுச் சுவரும் என் வீட்டுச் சுவரும் ஒன்றுதான் என்றாலும் அச்சுவரின் இடைவெளியை ஆகாய இடைவெளியாய் எண்ணி எண்ணி இதயம் கனத்திருக்கிறேன் உன் சந்திர வதனத்தையும் சங்கு கழுத்தையும் தொடுகின்ற ஆபரணத்தை ஏக்கமாய் பார்த்திருக்கிறேன் உன் இடையை சுற்றி தவழும் புடவையின் சின்ன நூலாக மாற தவமிருந்திருக்கிறேன் நீ மார்போடு அணைக்கும் புத்தகமாய் நானிருக்க கூடாதா என அழுதிருக்கிறேன் வெட்கத்தை விட்டு சொல்கிறேன் உனது பூம்பாதம் தாங்குகின்ற செருப்பாக பிறந்திருக்க கூடாதா என என்னையே நான் நொந்திருக்கிறேன் உன் கால்களை தழுவும் கொலுசுகளின் மீது பொறாமைப் பட்டிருக்கிறேன் உன் கொலுசுகளிலிருந்து எழும்புகின்ற கிணுகிணு ஓசை என் செவிகளை தீண்டும் போது ஆத்மா சிலிர்ப்படைய மெய்மறந்திருக்கிறேன் உன் விரல் நுனித் தீண்டிய புத்தகப் பக்கங்களை வருடி கனவுகளில் மிதந்திருக்கிறேன் நீ முதல் முதலாக என்னிடம் பேசியது ஊரில் இருந்து எப்போது வந்தாய் என்ற நான்கு வார்த்தைகள் அந்த நான்கு வார்த்தைகள்தான் எனது நான்கு வேதங்கள் உன் குரலைக் கேட்டதும் அப்போதுதான் என் காதுகள் திறந்ததும் அப்போதுதான் இந்த வார்த்தையை உன்னிடமிருந்து கேட்பதற்காகவே ஜனனம் எடுத்திருப்பதை உணர்ந்தேன் என் பிறவியின் பயன் கிடைத்து விட்டதாக மகிழ்ந்தேன் நீனாக வந்து என்னிடம் பேசியது மலரே வந்து வண்டிடம் கைகுலுக்கிக் கொண்டது போலிருந்தது நீ வந்து பேசிய அந்த நாளில் எனது வானில் ஆயிரம் நிலவுகள் அணிவகுப்பு நடத்தின என் தோட்டமெங்கும் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன என் மனதிற்குள் மட்டும் மழை மேகம் சூழ்ந்து மத்தளம் கொட்டியது |
கவிதைகள் >