கண்ணே வா காதல் செய்வோம்.

posted Feb 27, 2012, 10:22 AM by Sathiyaraj Thambiaiyah

கண்ணே வா 
காதல் செய்வோம்! 

நமது கூடலின் 
உஷ்ண மூச்சில் 
சீர் கெட்ட சாதிகள்
சிதைந்து போகட்டும். 

அணைப்பின் 
இறுக்கத்தில் வழியம் 
வியர்வைகலெல்லாம் 
அமிலமாகி 
அகமண முறையெனும் 
அரக்கனை 
வென்று வீழ்த்தட்டும். 

எண்ணில்லா பிள்ளைகள்
பிறந்து தவழட்டும் 
வரும் காலம் 
நிகழ்காலத்தோடு 
யுத்தம் தொடங்கட்டும். 

நின் குழல் சரிவிலும் 
கோல விழியிலும் 
என் குலப்பெருமை 
பட்டுஒழியட்டும். 

கண்ணே வா 
காதல் செய்வோம்! 

உனது வதன வெளிச்சம் 
வருணங்களின் 
குரூர விழிகளைக் 
குருடாக்கட்டும். 

தீண்டும் 
ஒவ்வொரு முத்தமும் 
உயர்வு தாழ்வு என்னும் 
வலிய சுவர்தனில் 
இடிகளாய் இறங்கட்டும் .

கண்ணே வா 
காதல் செய்வோம்! 

சாதியால் 
சமாதியாக்கப்பட்ட 
அனேக காதலர்களின் 
மனசாட்சியாய்.....

கண்ணே வா 
காதல்செய்வோம் !

Comments