![]() இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய அணி 191 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் தோனி 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து ஆஸி. அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. துவக்கத்தில் ஆஸி. அணியின் மூன்று விக்கெட்டுகளை வெகு வேகமாக வீழ்த்தினார் ஜாகீர்கான். அதன் பிறகு ரிக்கி பாண்டிங்கும் கேப்டன் கிளார்க்கும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடியது மட்டுமின்றி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. பாண்டிங் 44 ரன்களுடனும், கிளார்க் 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியது. இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர். சிறப்பாக ஆடிய பாண்டிங் 134 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கிளார்க்குடன் மைக் ஹசி ஜோடி சேர்ந்தார். அட்டகாசமாக விளையாடிய மைக்கேல் கிளார்க் தனது டெஸ்ட் அரங்கில் முதலாவது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். 284 பந்துகளை சந்தித்து, 24 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் இந்த இரட்டை சதத்தை நிறைவு செய்தார். மைக் ஹஸி தன் பங்கிற்கு அரை சதம் அடித்து அசத்தினார். இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி. அணி 4 விக்கெட் இழப்பிற்கு 482 ரன்கள் எடுத்துள்ளது. மைக்கேல் கிளார்க் 251 ரன்களுடனும், ஹஸி 55 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸி. அணி தனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 291 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்று நாள் முழுவதும் பந்து வீசிய இந்திய பந்து வீச்சாளர்களால் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும்தான் வீழ்த்த முடிந்தது. இது இந்திய அணியின் மோசமான பந்து வீச்சை காட்டுகிறது. இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதமிருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் சிட்னி டெஸ்டும் நம் வசம் இல்லாமல் போய்விடும். |
விளையாட்டு >