டிராவிட் சதம் வலுவான நிலையில் இந்தியா

posted Nov 14, 2011, 7:06 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 14, 2011, 7:07 PM ]
கோல்கட்டா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் டிராவிட் சதம் அடிக்க, இந்திய அணி வலுவான ஸ்கோரை நோக்கி முன்னேறுகிறது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 
 இந்திய அணிக்கு கவுதம் காம்பிர், சேவக் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்திருந்த போது, சேவக் (38) அவுட்டானார். அடுத்து வந்த அனுபவ வீரர் டிராவிட்டுடன் இணைந்த காம்பிர், டெஸ்ட் அரங்கில் தனது 17வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 65 ரன்கள் எடுத்திருந்தபோது, பிடல் எட்வர்ட்ஸ் "வேகத்தில்' வெளியேறினார். அடுத்து வந்த சச்சின் (38) அதிக நேரம் நீடிக்கவில்லை. 
லட்சுமண் அசத்தல்:
பின் இணைந்த டிராவிட்-லட்சுமண் ஜோடி, கோல்கட்டா மண்ணில் மீண்டும் ஒருமுறை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய டிராவிட், டெஸ்ட் அரங்கில் தனது 36வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த லட்சுமண், டெஸ்ட் அரங்கில் தனது 56வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்த போது பிராத்வைட் சுழலில் டிராவிட் (119) போல்டானார். இதன்மூலம் இந்த ஜோடி, டெஸ்ட் அரங்கில் 12வது முறையாக நூறு அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்தது.
"நைட் வாட்ச்மேன்' இஷாந்த் சர்மா (0) ஏமாற்றினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 346 ரன்கள் எடுத்திருந்தது. லட்சுமண் (73) அவுட்டாகாமல் இருந்தார். 
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிடல் எட்வர்ட்ஸ், டேரன் சமி, கீமர் ரோச், தேவேந்திர பிஷூ, பிராத்வைட் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இன்று லட்சுமண், யுவராஜ், தோனி உள்ளிட்டோர் விரைவாக ரன் சேர்க்கும்பட்சத்தில் இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்டி, வெஸ்ட் இண்டீசுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

100வது சதம் எப்போது சச்சின்
சச்சின் 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு நேற்றும் ஏமாற்றமே மிஞ்சியது. பிஷூ சுழலில் மீண்டும் சிக்கிய இவர், 38 ரன்களுக்கு நடையை கட்டினார். இவர், கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில் தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார். அதன்பின் இவர் விளையாடிய நான்கு ஒருநாள் (2, 53, 85, 18 ரன்கள்), ஆறு டெஸ்ட் (34, 12, 16, 56, 1, 40, 23, 91, 7, 76, 38 ரன்கள்) போட்டியில் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.

பிராட்மேன் வழியில் அஷ்வின்
 திருமணம் செய்து கொண்ட அடுத்த நாளில் கோல்கட்டா டெஸ்டில் பங்கேற்றார் இந்திய வீரர் அஷ்வின். இதன்மூலம் திருமணம் முடித்த சில நாட்களில் சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இணைந்தார். முன்னதாக 1932 ஏப்., 30ல், ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், ஜெசி பிராட்மேனை சிட்னியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு மறுநாளே, அமெரிக்கா மற்றும் கனடாவில் நடந்த சர்வதேச தொடரில் பங்கேற்றார். சமீபத்தில் இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிர், திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே, டில்லியில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பங்கேற்றார். இதேபோல பிஷன் சிங் பேடி (இந்தியா, 1967-68), ராகுல் டிராவிட் (இந்தியா, 2003), ஆன்டிரி நெல் (தென் ஆப்ரிக்கா, 2003-04) ஆகியோர் திருமணத்திற்கு மறுநாளே சர்வதேச தொடரில் பங்கேற்றனர்.

80,000ல் இருந்து 10,000
கடந்த 2001ல் இந்தியா-ஆஸ்திரேலிய இடையே நடந்த டெஸ்ட் போட்டியை காண கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் 80 ஆயிரம் ரசிகர்கள் வந்திருந்தனர். நேற்று 10 ஆயிரத்திற்கும் குறைவான ரசிகர்களையே காண முடிந்தது. இது டெஸ்ட் போட்டிக்கான ஆர்வம் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதை சுட்டிக் காட்டியது.

13,000 ரன்களை நோக்கி
நேற்றைய போட்டியில் பொறுப்பாக ஆடிய இந்திய வீரர் டிராவிட், டெஸ்ட் அரங்கில் தனது 36வது சதத்தை பதிவு செய்தார். இது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இவரது 5வது சதம். இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். முதலிரண்டு இடத்தில் கவாஸ்கர் (13 சதம்), வெங்சர்க்கார் (6 சதம்) உள்ளனர்.
* இது, ஈடன் கார்டன் மைதானத்தில் டிராவிட் பதிவு செய்த நான்காவது சதம். இதன்மூலம் இங்கு அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில், இரண்டாவது இடத்தை லட்சுமணுடன் (4 சதம்) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் முன்னாள் கேப்டன் அசார் (5 சதம்) உள்ளார். தவிர டிராவிட் (962 ரன்கள்), ஈடன் கார்டனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் லட்சுமண் (1114 ரன்கள்) உள்ளார்.
* இது, இந்த ஆண்டு டிராவிட் அடித்த ஐந்தாவது சதம். இதன்மூலம் இந்த ஆண்டு இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்துள்ள வீரர்கள் வரிசையில் முதலிடத்தை இங்கிலாந்தின் இயான் பெல்லுடன் (5 சதம்) பகிர்ந்து கொண்டார். தவிர, இந்த ஆண்டு இதுவரை அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார் டிராவிட் (952 ரன்கள்). இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் இயான் பெல் (950 ரன்கள்) உள்ளார்.
* இவர், இன்னும் 21 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், டெஸ்ட் அரங்கில் 13 ஆயிரம் ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமை பெறலாம். இதுவரை இவர், 159 டெஸ்டில் பங்கேற்று 36 சதம், 61 அரைசதம் உட்பட 12,979 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (183 டெஸ்ட், 15, 086 ரன்கள்) உள்ளார்.