இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி

posted Jan 6, 2012, 7:19 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 6, 2012, 7:20 AM ]
சிட்னியில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது.
இந்தியா முதல் இன்னிங்சில் 191  ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 659 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

கிளார்க் 329, ஹசி 150 ஓட்டங்கள் விளாசினர். 468 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 3வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்தது. ஹில்பன்ஹாஸ் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

காம்பீர் 68 ஓட்டங்களுடனும், டெண்டுல்கர் 8 ஓட்டங்களுடனும் இன்று 4வது நாள் ஆட்டத்தை ஆடினர். 142 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் காம்பீர் 83 ஓட்டங்கள் எடுத்து பீட்டர் சிடில் பந்தில் ஆட்டமிழந்தார்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய சச்சின், லட்சமண் அரை சதம் அடித்தனர். பொறுமையாக ஆடிவந்த சச்சினை 80 ஓட்டங்களில் கிளார்க் பெவிலியனுக்கு திருப்பினார்.

141 பந்துகளை சந்தித்த சச்சின் 9 பவுண்டரிகளுடன் இந்த ஓட்டத்தை எடுத்தார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் லட்சுமணை 66 ஓட்டங்களில் ஹில்பன்ஹாஸ் போல்டாக்கினார். அதன் பின்னர் மளமளவென விக்கெட் வீழ்ந்தது. டோனி வந்த வேகத்திலேயே 2 ஓட்டங்களிலும், கோக்லி 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் அஸ்வின், ஜாகீர் அதிரடியாக ஆடினர். ஜாகீர் 35, இஷாந்த் 11 ஓட்டங்களில் வெளியேறினர். அஸ்வின் 76 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 62 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஹில்பன்ஹாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

முடிவில் இந்திய அணி 400 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

ஹில்பன்ஹாஸ் 5, சிடில் 2, பேட்டின்சன், லயான், கிளார்க் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியால் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3வது டெஸ்ட் வரும் 13ந் திகதி பெர்த் நகரில் தொடங்குகிறது.